×
Saravana Stores

சுற்றுலா பயணிகளை கலங்கடித்த காட்டுமாடு

*கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டுமாடு விரட்டியதால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார, தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகளின் நடமாட்டமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக காட்டு மாடுகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக சர்வ சாதாரணமாக நகரில் உலா வரும் காட்டுமாடுகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அவ்வப்போது தாக்கி அச்சுறுத்தி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் காட்டுமாடுகள் தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தந்திருந்தனர். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் மாலை வேளையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ஏரி பகுதியில் புகுந்த காட்டுமாடு ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து அலறியடித்து கொண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த காட்டுமாடு அங்கிருந்த சென்ற பின்பே சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காட்டுமாடுகள் நகரில் புகுவதை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுற்றுலா பயணிகளை கலங்கடித்த காட்டுமாடு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodiakanal ,Princess ,of ,the Mountains ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம்