×
Saravana Stores

இடுக்கியில் இப்படி ஒரு ஸ்பாட் இயற்கை எழில் கொஞ்சும் அஞ்சுருளி சுரங்கம்

மூணாறு : இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அஞ்சுருளி சுரங்கம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள அஞ்சுருளி சுரங்கப்பாதை 1980ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை 5.5 கி.மீ நீளமும், 24 அடி விட்டமும் கொண்டது. இந்தியாவில் ஒரே மலையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 2430 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் இரட்டையாறு பகுதிக்கும் அஞ்சுருளிக்கும் இடையே ஒரே பாறையில் 5.5 கி.மீ.தூரம் சுரங்கம் அமைக்கப்பட்டு இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கட்டப்பனை அருகே உள்ள காஞ்சியார் கிராமத்தைச் சேர்ந்த இந்த இடம், இடுக்கி ஆர்ச் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் கடைசிப் பகுதியாக உள்ளது.

மேலும் அப்பகுதியில் புல்மேடுகள், காடுகள் என பசுமையான சூழல் நிலவுவதால் சாகச சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து சுற்றுலா பயணிகளின் விரும்பமான இடமாக அஞ்சுருளி சுரங்கம் மாறியுள்ளது. மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் சுரங்கம் அருகில் செல்ல இயலாது.நீர் வரத்து குறையும்போது சுரங்கம் அருகிலும், அதன் உள்ளேயும் செல்லலாம். இருட்டாக இருக்கும் என்பதால் அலைபேசியில் உள்ள லைட்டை பயன்படுத்தி பயணிகள் செல்கின்றனர்.

சுரங்கத்தினுள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆபத்து ஏற்படும் என்பதால் அதிக தூரம் செல்வதில்லை. இயற்கை எழில் கொஞ்சும் அப்பகுதியில் தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளின் சினிமா படபிடிப்புகளும் நடந்துள்ளன.அஞ்சுருளி பகுதியில் அழகிய நீர்வீழ்ச்சியும் உள்ளது. அதில் நீர் வரத்து குறையும்போது குளிக்கலாம்.

தற்போது அஞ்சுருளி சுரங்கத்தில் வரும் தண்ணீரின் அளவு குறைவு என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுரங்கத்திற்குள் பயணம் செய்யவும்,குளிக்கவும் இங்கு வருகை தருகின்றனர். மேலும் அங்கிருந்து இடுக்கி அணையின் காட்சிகளையும் காணலாம். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை என்பது இப்பகுதியின் சிறப்பு. இந்த இடத்திற்கு இடுக்கி மாவட்டம் கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை வழியாக 9 கி.மீ. தொலைவில் அஞ்சுருளி சுரங்கத்தை சென்றடையலாம்.

The post இடுக்கியில் இப்படி ஒரு ஸ்பாட் இயற்கை எழில் கொஞ்சும் அஞ்சுருளி சுரங்கம் appeared first on Dinakaran.

Tags : Sunaru ,Anhuruli Tunnel ,Pikki Dam ,Anchuruli Tunnel ,Katappan ,Idukki District of Kerala ,Dinakaran ,
× RELATED யானைகள், புலிகள் நடமாட்டத்தை...