×

வழிப்பறி திருடர்களை கண்காணிக்க நாமக்கல் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார்

நாமக்கல் : வழிப்பறி திருடர்களை கண்காணிக்க, நாமக்கல் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருச்சி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. 24 மணி நேரமும் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருவதும், செல்வதும் உண்டு.

பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்புக்காக, பஸ் நியைத்திற்குள் புறநகர் காவல்நிலையம் கடந்த 15 ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. இந்த புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டது முதல், இதன் செயல்பாடு பெரிய அளவில் இல்லை. பெயர் அளவுக்கு மட்டும் தான் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் நகர காவல்நிலையத்திற்கு புதியதாக பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டர்கள் ஒரு சில நாட்கள் மட்டும் புறக்காவல் நிலையத்திற்கு விசிட் அடிப்பார்கள்.

பின்னர், அந்த பக்கம் வருவதை குறைத்து கொள்வார்கள். எஸ்ஐக்களும் புறக்காவல்நிலையம் பக்கம் வருவது கிடையாது. பெயர் அளவுக்கு ஒரு காவலர் மட்டும் புறக்காவல் நிலையத்திற்கு வருவதும் பின்னர் திடீரென அவரை வேறு பணிக்கு காவல்நிலையத்தில் இருந்து அழைத்து விடுவார்கள். இதனால் புறக்காவல் நிலையம் பெரும்பாலான நேரங்களில் பூட்டிதான் கிடக்கும். மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் அமைந்துள்ள புறக்காவல்நிலையத்தில் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுத்து 24 மணி நேரமும் புறக்காவல்நிலையத்தில் போலீசார் பணியில் இருக்கவேண்டும். ஆனால் அது போன்ற நிலை இங்கு ஏற்படவில்லை.

சமீப காலமாக நாமக்கல் பஸ்நிலையத்தில் திருட்டுகள், வழிப்பறிகள் அதிகரித்து விட்டது. பஸ்நிலையத்தின் அருகிலேயே 2 டாஸ்மாக் கடைகள் இருப்பதால் இரவில் போதையில் வருபவர்களிடம் பணத்தை எளிதாக மர்ம நபர்கள் திருடி சென்று விடுவார்கள்.

இதைதடுக்க போதிய அளவில் போலீசார் இரவு நேரங்களில் புறக்காவல் நிலையத்தில் இருப்பதில்லை என பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கூறுகின்றனர். நாமக்கல் பஸ் நிலையத்தில், இரவில் கூலி தொழிலாளர்கள், வீடு இல்லாதவர்கள் படுத்து தூங்குகின்றனர். அவர்களிடம் இருந்து மர்மநபர்கள் பணத்தை எளிதாக திருடி சென்று விடுகின்றனர். இது பற்றி அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றசாட்டும் ஆண்டுகணக்கில் இருக்கிறது.

தற்போது நாமக்கல் மாநகரமாக மாறிவிட்டது. நாமக்கல் காவல்நிலையத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் கபிலன் புறக்காவல் நிலையத்தில் போதிய எண்ணிக்கையில் போலீசாரை பணியில் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.இது குறித்து அவர் கூறுகையில், ‘நாமக்கல் காவல்நிலையத்திற்கு புதியதாக 15 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் சேர்ந்தவுடன், புறக்காவல்நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

எப்போதும் பஸ்நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு இருக்கவேண்டும். அதற்கேற்ப தற்போது போலீசாரின் பணிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் என்ன நடக்கிறது. அங்கு நிலவும் சூழல் என்ன என்பது தெரியவந்துள்ளது. நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் இனி முழுமையாக செயல்படும். பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு எதாவது இடையூறு ஏற்பட்டால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள விளம்பர நிலையத்தில், காவல்துறையின் எச்சரிக்கை தொடர்ந்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

The post வழிப்பறி திருடர்களை கண்காணிக்க நாமக்கல் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Namakkal bus station ,Namakkal ,Trichy ,Coimbatore ,Salem ,Erode ,Dinakaran ,
× RELATED 2023-ம் ஆண்டில் திருச்சி சாலையில் நடந்த...