×
Saravana Stores

விபத்தில் கால்கள் உடைந்த நிலையில் எப்ஐஆர் பதிவு செய்ய போலீஸ் மறுப்பதாக லாரி ஓட்டுநர் ஆம்புலன்சில் வந்து புகார்

ஊட்டி : ஊட்டியை சேர்ந்தவர் ஓட்டுநர் ஜோசப், விபத்தில் கால்கள் உடைந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே விசி காலனி பகுதியில் வசிக்கிறேன். மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தேன்.

கடந்த மாதம் 6ம் தேதி கிரேன் மூலம் லாரியில் பழைய பொருட்கள் ஏற்றி கொண்டிருந்தோம். அப்போது பழைய லாரியின் பாகங்களை ஏற்றும் போது கிரேன் கொக்கி கழன்று லாரி பாகங்கள் என் மீது விழுந்து விட்டன. இதில் எனது இரு கால்களும் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.

ஆனால், இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விட்டு விட்டனர். கோவையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், என்னுடைய இரு கால்களும் செயல் இழந்து போனதால் நானும் எனது குடும்பமும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கழித்து என் மனைவி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், தாமதமாகி விட்டது என்று கூறி வழக்குப்பதிவு செய்து எப்ஐஆர் தர போலீசார் மறுத்து விட்டனர்.

இதனால், எனக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்து சம்பந்தமாக எப்ஐஆர் பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post விபத்தில் கால்கள் உடைந்த நிலையில் எப்ஐஆர் பதிவு செய்ய போலீஸ் மறுப்பதாக லாரி ஓட்டுநர் ஆம்புலன்சில் வந்து புகார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Joseph ,Ammanu ,VC ,Ooty Pingar ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில்...