×
Saravana Stores

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு கொள்ளு தாத்தா வாங்கிய நிலத்தை நரிக்குறவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதா?

*எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தினர், இடம் கேட்டு நரிக்குறவர்கள் தர்ணா

வேலூர் : 1946ம் ஆண்டு கொள்ளு தாத்தா வாங்கிய நிலத்தினை நரிக்குறவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதா? என்று குடும்பத்தினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதேபோல் எங்களுக்கு ஒதுக்கிய இடத்தினை எங்களுக்கே வழங்க கோரி நரிக்குறவர்களும் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

இதில் காட்பாடி அடுத்த லத்தேரி செஞ்சி கிராமத்தை சேர்ந்த மலர் என்பவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்து டிஆர்ஓ மாலதி அவர்களை சமாதானம் செய்தார். பின்னர் கூட்டத்தில் மலர் அளித்த மனுவில், 1992ம் ஆண்டு போலியான ஆவணங்கள் தயாரித்து வருவாய்துறை மூலம், எங்களுக்கு சொந்தமான பட்டாவை வேறு ஒருவருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளனர். அதனை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

காட்பாடி அடுத்த கரிகிரியை சேர்ந்த சுனில்குமார் மற்றும் குடும்பத்தினர் அளித்த மனுவில், ‘1946ம் ஆண்டு எங்களது கொள்ளு தாத்தா முனியன் 4.74 ஏக்கர் நிலத்தை ரூ.2க்கு வருவாய்துறையிடம் இருந்து வாங்கினார். அதற்கு சான்றாக ‘சர்டிபிகேட் ஆப் சேல்’ என்ற அசல் சான்றிதழை வருவாய்துறையினர் கொடுத்தனர்.நானும் எங்களது உறவினர்களும், வீடு கட்டி வரி செலுத்தி அனுபவித்து வந்தோம். ஆனால் 2019ம் ஆண்டு வருவாய்துறையினர் எங்களின் இடம் நரிக்குறவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக கூறினர். ஜேசிபி வைத்து நிலக்கடலை பயிரை சேதப்படுத்தினர். கிணற்றையும் மூடிவிட்டனர்.

நாங்கள் ஆட்சேபணை செய்தோம். அதற்கு பிறகு 10 நாள் கழித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். எங்களிடம் இருந்த ‘சேல்’ சான்றிதழை ஆய்வு செய்த அவர்கள், இனி யாரும் குடிசை போட மாட்டார்கள் என்று கூறி சென்றனர். இந்நிலையில் கடந்த 22ம்தேதி காலை எங்கள் நிலத்திற்கு வந்த நரிக்குறவர்கள், எங்கள் நிலத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்ட முயற்சித்தனர். நாங்கள் திருவலம் போலீசில் புகார் செய்தோம்.

போலீசார் வந்து ஜேசிபியை தடுத்து நிறுத்தினர். இருதரப்பிலும் மேல்முறையீடு செய்யும்படிகூறி, அதுவரை கட்டுமானபணி செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். எனவே எங்களுக்கு சொந்தமான இடத்தை வேறு யாருக்கும் பட்டா மாறுதல் செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சுனில்குமார் கூறிய இடம், தங்களுக்கு ஒதுக்கியது என்று நரிக்குறவர்கள் 40க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்ட வழங்கிய இடமாகும். எனவே அந்த இடத்தை எங்களுக்கே வழங்க வேண்டும், என்றனர். இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்த நரிக்குறவர்கள் அளித்த மனுவில், நாங்கள் 27 குடும்பத்தினர் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கியதில் வீடு கட்டியுள்ளோம். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

அலமேலுமங்காபுரத்ைத சேர்ந்த வில்சன் அளித்த மனுவில், அலமேலுமங்காபுரத்தில் எனக்கு சொந்தமான பழைய வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். வீட்டை பூட்டிக்கொண்டு எங்கு சென்றார் என தெரியவில்லை. வீட்டை திறந்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

காட்பாடி அடுத்த புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அளித்த மனுவில், எங்கள் ஊர் திரவுபதியம்மன் கோயில் குளம் நீர்பிடிப்பு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வேலூர் விண்ணம்பள்ளியைச் சேர்ந்த வரலட்சுமி அளித்த மனுவில், ‘நான் மகிமண்டலம் கூட்ரோடு வழி விண்ணப்பள்ளியைச் சேர்ந்த நபர்களிடம் சீட்டு கட்டி 3 சீட்டு எடுத்துவிட்டோம். மீதமுள்ள 6 சீட்டு தராமல் ஏமாற்றி வருகின்றனர். பணத்தை மீட்டு தர நடவடிக்கை வேண்டும். காட்பாடி மெட்டுக்குளம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் வசதி சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவியை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.9.10லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை வழங்கினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 450 மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சுப்புலட்சுமி அறிவுறுத்தினார். முன்னதாக சர்வதேச சைகை மொழி தினத்தையொட்டி, சைகை மொழியின் முக்கியத்துவத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விரிவாக விளக்கப்பட்டது.

ரஜினி, கமலுடன் நடித்தவர் உதவி கேட்டு மனு

வேலூர் கஸ்பாவை சேர்ந்த, சுமார் மூன்றரை அடி உயரமுள்ள ஜாக்கி என்கிற ராஜா, மாற்றுத்திறனாளி நடிகரான இவர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கூறுகையில், ‘நான் ரஜினி, கமல், விஜயகாந்த்துடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். தற்போது எனது 2 கால்களும் செயலிழந்து அவதிப்பட்டு வருகிறேன். நடக்க முடியவில்லை. சக நடிகர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, இருக்க இடமின்றி அவதிப்பட்டு வருகிறேன், மருத்துவ உதவியும் இல்லாமல் அவதிப்படுகிறேன். எனவே தமிழக அரசு உதவி செய்ய வேண்டும், என்றார்.

நக்சல் தாக்குதலில் மரணமடைந்த, வீரரின் மனைவிக்கு கருணை தொகை

கடந்த ஜனவரி மாதம் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் சில்ஜர் முகாமுக்கு அருகில் நக்சலைட் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த சிர்பிஎப் கான்ஸ்டபிள் தேவன் அவரது மனைவி காயத்திரிக்கு கருணை தொகை ரூ.40 லட்சத்திற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

The post வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு கொள்ளு தாத்தா வாங்கிய நிலத்தை நரிக்குறவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதா? appeared first on Dinakaran.

Tags : Vellore Collector ,Vellore ,Dinakaran ,
× RELATED தீர்த்தகிரி முருகர் கோயில்...