×
Saravana Stores

கிளை வாய்க்கால்களை தூர்வாராததால் கீழமாத்தூர், குமாரகுடி பகுதியில் தண்ணீர் இன்றி நிலங்கள் வறண்டுபோனது

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கீழமாத்தூர் குமாரக்குடி ஆகிய கிராமங்களில் கிளை வாய்க்கால்கள் தூர் வாராததால் நிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீழமாத்தூர், குமாரக்குடி கிராமங்கள் உள்ளது. இந்த இரண்டு கிராமங்களிலும் 500 ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

அப்பகுதியில் ராஜன் வாய்க்காலிலிருந்து கார் கண்ணி வாய்க்கால், பட்டா கண்ணி வாய்க்கால் ஆகிய கிளை வாய்க்கால்கள் பிரிந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது.இந்த வாய்க்கால்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக தூர் வாராமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வந்தும் கிளை வாய்க்கால்கள் மூலம் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த இரண்டு கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் விடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள நிலங்களில் விவசாயிகள் இதுவரை சம்பா நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு செய்த மழையை வைத்து சிலர் உழவு செய்தனர். நேரடி விதைப்பு பணியை மேற்கொள்ள தயாராக இருந்து வருகின்றனர். ஆனால் சம்பா நேரடி விதைப்பு செய்து தண்ணீர் பாய்ச்சும் அளவுக்கு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராமல் இருந்து வருவதால் இதுவரை சம்பா நேரடி விதைப்பு செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் இரண்டு கிளை வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழ்படுத்தினால் மட்டுமே தண்ணீர் பாசனத்திற்கு வந்து சேரும்.

இல்லையென்றால் தண்ணீர் பாசனத்திற்கு வந்து சேராது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கொள்ளிடம் விவசாய சங்க செயலாளர் தனுஷ்கோடி கூறுகையில், கீழமாத்தூர்,குமார குடி பகுதியில்உழுது போடப்பட்ட நிலங்கள்,தண்ணீர் இல்லாமல் சம்பா நேரடி விதைப்பு செய்ய முடியாமல் வெறுமையாக கிடக்கின்றன.

இந்த பாசன வாய்க்கால்களை மட்டுமே நம்பி தான் இப்பகுதியில் 500 ஏக்கர் நிலங்கல் இருந்து வருகின்றன.எனவே அதிகாரிகள் இனிமேலாவது நேரடியாக சென்று பார்வையிட்டு உடனடியாக போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள பாசன கிளை வாய்க்கால்களை தூர்வாரி ஆழ்படுத்தி சம்பா சாகுபடி செய்யும் அளவுக்கு தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post கிளை வாய்க்கால்களை தூர்வாராததால் கீழமாத்தூர், குமாரகுடி பகுதியில் தண்ணீர் இன்றி நிலங்கள் வறண்டுபோனது appeared first on Dinakaran.

Tags : Geezamathur ,Kumaragudi ,Kollidam ,Geezamathur Kumarakudi ,Mayiladuthurai district ,Keezamathur ,Kumarakudi ,Dinakaran ,
× RELATED பழையாறு மீன்பிடி துறைமுகத்தில்...