×
Saravana Stores

₹48 கோடியில் அதிநவீன வசதிகளுடன் ஓசூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்

*கூடுதலாக ரூ.18.50 கோடி ஒதுக்கீடு

ஓசூர் : ஓசூரில், ரூ.48 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ள புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. தொழில் நகரமாக விளங்கும் ஓசூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல்வேறு மாநில மற்றும் மாவட்ட மக்கள் பணி நிமித்தமாக குடியிருந்து வருகின்றனர்.

5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஓசூர் மாநகரில், நாள்தோறும் பணி நிமித்தமாக மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஊராட்சி அந்தஸ்தில் இருந்த ஓசூர், பேரூராட்சி, நகராட்சி அந்தஸ்தை பெற்றது.

ஓசூரில் சீதாராம்மேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் 1980க்கு முன்பு ஓசூர் பஸ் நிலையம் இயங்கி வந்தது. பின்னர் ஓசூர் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரூ.12கோடி மதிப்பீட்டில், கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஓசூர் நகரின் மைய பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு அன்றைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், ஓசூர் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

நாள்தோறும் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் என 800க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, ஓசூரில் கூடுதல் வசதிகளுடன் பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக ஓசூரில் மோரனப்பள்ளியில் ரூ.30கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு, அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டம் 2023-2024ன் கீழ் இந்த பஸ் நிலையம் கட்டப்படுகிறது.

இதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் நிதியில் இருந்து ரூ.15 கோடியும், மாநகராட்சியின் பங்கு தொகையாக ரூ.10 கோடியும், தூய்மை இந்தியா திட்டம் மூலம் ரூ.1 கோடியே 46 லட்சத்திலும், பஸ் நிலைய கடைகள் முன் ஏல தொகை மூலமாக ரூ.3கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.30கோடியில் இந்த பஸ் நிலையம் அமைய பெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் ஒரே நேரத்தில் 62 பஸ்கள் நிற்க கூடிய வகையிலும், 89 கடைகளும், தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஏ.டி.எம். வசதிகள், போலீஸ் நிலையம், கண்காணிப்பு கேமராக்கள், பொதுமக்கள் காத்திருப்பு பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், ஓட்டல்கள், நேரம் காப்பாளர் அறைகள், குடிநீர் வசதி, தீயணைப்பு கருவிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் என அனைத்தும் ஒருங்கே இங்கு அமைய பெற உள்ளன.

இந்நிலையில், ஓசூர் பஸ் நிலையத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.18 கோடியே 20 லட்சம் அனுமதித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூருவுக்கு மிக அருகாமையில் ஓசூர் உள்ளதால், அதிக அளவில் ஓசூர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்லும். இதனால் கூடுதல் வசதிக்காக ரூ.18 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்படுகிறது.

இதன்படி பஸ் நிலையத்தில சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி என பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஓசூர் மற்றும் பெங்களூரு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.

The post ₹48 கோடியில் அதிநவீன வசதிகளுடன் ஓசூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,new bus station ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட முயன்றவரால் பரபரப்பு