×
Saravana Stores

ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் கொடைக்கானல் நிலப்பிளவு சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு

*நிபுணர் குழு தகவல்

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலையில் ஏற்பட்ட நிலப்பிளவு சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலையில் உள்ள கிளாவரை மலைக்கிராமம் வந்தரவு வனப்பகுதியில் சுமார் 300 அடி தூரத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டது.

இதன் ஆழம் தெரியாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த நிலப்பிளவு எதனால் ஏற்பட்டது என ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து வருவாய்த்துறையினர், வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு முதல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

நேற்று புவியியல் தொழில்நுட்ப துறை இணை இயக்குனர் சுந்தர்ராமன், வந்தரவு வனச்சரகர் பிரபு மற்றும் வருவாய்- ஊரக வளர்ச்சி துறையினருடன் பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் நிலப்பிளவு ஏற்பட்ட பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் புவியியல் தொழில்நுட்ப இணை இயக்குனர் சுந்தர்ராமன் கூறியதாவது: சுமார் 65 மீட்டர் அளவிற்கு இந்த நிலப்பிளவானது ஏற்பட்டுள்ளது. மண் பகுதி என்பதால் நடந்ததா அல்லது நீரோட்டம் உள்ளதால் நடந்ததா என ஆய்வு செய்துள்ளோம். தொடர்ந்து இந்த பகுதியில் பல்வேறு நிலைகளில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு குறிப்பாக சாட்டிலைட் உதவியுடன் தொடர்ந்து உன்னிப்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. இதனுடைய ஆய்வு அறிக்கை ஓரிரு தினங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் சமர்ப்பிக்கப்படும். வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும், இந்த நிலப்பிளவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த நிலப்பிளவு ஒரு மாத காலத்திற்கு முன்பு கூட ஏற்பட்டிருக்கலாம். வனப்பகுதியாக இருப்பதால் மிகப்பெரிய ஆபத்து பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறியதாவது, ‘‘நிபுணர் குழுவினருடன் சேர்ந்து நாங்களும் இந்த பகுதியை நேரடியாக பார்வையிட்டோம். நிபுணர் குழுவினர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து உள்ளனர். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. விரைவில் நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

The post ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் கொடைக்கானல் நிலப்பிளவு சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodaikanal hill ,Klavari hill ,Kodaikanal Melamalaya, Dindigul district ,
× RELATED ஆலன் விமர்சனம்