கோவை : சென்னையிலிருந்து இரவு 11.15 மணி அளவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்ட நிலையில் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயிலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பொது பெட்டியில் உள்ள கீழ் சீட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தை அனாதையாக கிடப்பதை அறிந்த அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்ஐ திருப்பதி, போலீசார் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு விசாரித்தனர். குழந்தையின் கையில் பாசி ஒன்று கட்டப்பட்டிருந்தது. குழந்தையை துணியை போர்த்தி அப்படியே விட்டு சென்றிருந்தனர். போலீசார் ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலரிடம் விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் பெற்றோர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
போலீசார் குழந்தையை தூக்கிய போது திடீரென விழித்து எழுந்த குழந்தை அம்மாவ காணோம் எனக்கேட்டு அழுதது. அந்த குழந்தையால் பசியுடன் அம்மா, அம்மா என கதறி அழுதபடியே இருந்தது. வேறு எந்த வார்த்தையும் குழந்தை பேசவில்லை. போலீசார் கேட்ட போதும் குழந்தையால் சரியாக புரிந்து பதில் தரவில்லை.போலீசார் குழந்தைக்கு பால் வாங்கி தந்து பசியாற்றினர்.
இருந்த போதிலும் குழந்தை தாயை தேடி பரிதாபமாக அழுது கொண்டே இருந்தது. போலீசார் ரயில் பெட்டி முன் தாய் அல்லது உறவினர்கள் குழந்தையை தேடி வருவார்கள் என நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. ரயிலின் கடைசி பெட்டி இருந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா இல்லை. அந்த வழியாக குழந்தையின் தாய் சென்றாரா? என தெரியவில்லை. போலீசார் குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது அந்த குழந்தை கிணத்துக்கடவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்து வளர்த்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,‘‘குழந்தையின் தாய் வேறு ரயில் நிலையத்தில் இறங்கி சென்றிருக்கலாம். குழந்தையை யாரும் கவனிக்காமல் விட்டது சந்தேகமாக இருக்கிறது. ரயில் நிலைய வட்டாரத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். தாய் கிடைக்காவிட்டால் குழந்தையை உரிய காலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் விதிமுறைப்படி தத்து கொடுத்து விடுவார்கள்’’ என்றனர்.
The post ராத்திரியில் ரயிலில் விட்டு சென்ற ‘கல் மனசு தாய்’ ‘அம்மாவ காணோம்’… அழுது துடித்த பெண் குழந்தை appeared first on Dinakaran.