*திருச்சி சிறையில் அடைப்பு
திருவெறும்பூர் : ஐஜேகே மாநில நிர்வாகியான பிரபல ரவுடி பட்டறை சுரேஷ், திருச்சி எஸ்பியின் ஆபரேஷன் அகழியில் கைதானார். அவரிடம் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
நேற்று அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.பிரபல ரவுடிகள் பொதுமக்களிடமிருந்து போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை ஏமாற்றி பறித்து கொண்டதாக திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து கடந்த 19ம் தேதி ‘ஆபரேஷன் அகழி’ என்ற பெயரில் அதிரடியாக ஒரு குழுவிற்கு, ஒரு இன்ஸ்பெக்டர் என்ற விதத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14சப்-இன்ஸ்பெக்டர்கள், 42 போலீசார் என 14 குழு அமைத்து திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட 14 ரவுடிகளுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோ நோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 செல்போன்களும், 84 சிம்கார்டுகளும், பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்கள், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்கள் ஆகியவற்றை இந்திய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி செயலாளரான திருவெறும்பூர் அடுத்த நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மைக்கேல் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர். இதில் கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்கள் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்துவட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பட்டறை சுரேஷ் வீட்டில் இல்லாத நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அதன்பன் திருவெறும்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சர்க்கார்பாளையம் கல்லணை சாலையில் வேங்கூர் பூசத்துறை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை மறித்து விசாரித்தபோது, காரில் ரவுடி பட்டறை சுரேஷ் இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெரிய வாள் ஒன்றும் கைப்பற்றினர். பின்னர் காரையும், பட்டறை சுரையும் திருவெறும்பூர் காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை யாரை எல்லாம் மிரட்டி வாங்கினார், எப்படி மிரட்டினார், போலி ஆவணங்கள் தயாரித்தது எப்படி, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரது ஆதரவாளர்களான அண்ணாமலை, ஏழுமலைக்கு என்ன தொடர்பு என துருவி துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர் திருச்சி ஜெ.எம் 6 நீதிமன்றத்தில் நேற்று மாலை பட்டறை சுரேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பட்டறை சுரேஷ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
நாதக நிர்வாகி கைது: திருச்சி மாவட்டம் முக்கொம்பு நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில் கடந்த 19ம்தேதி இரவு நடந்த ஆபரேஷன் அகழி வாகன சோதனையில் சிக்கிய காரை சோதனை செய்ததில் பயங்கர ஆயுதங்களுடன் திருச்சி மாவட்ட நாதக மாவட்ட பொருளாளரான, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த சந்திரமௌலி (எ) மௌலி(39) கைது செய்யப்பட்டார். அவர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
The post ‘ஆபரேஷன் அகழி ’யில் கைதான ஐஜேகே நிர்வாகி பட்டறை சுரேஷிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.