×
Saravana Stores

ஊட்டி நுந்தளா பகுதியில் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு மாடு

 

ஊட்டி, செப். 24: நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. வன விலங்குகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாத நிலையில் வன விலங்குகள் கிராம பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.
வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, நீரோடைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் மற்றும் சாலைகளில் வலம் வரும் இந்த காட்டு மாடுகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில சமயங்களில் மனித – காட்டு மாடு மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சமீபகாலமாக நுந்தளா கிராமத்துக்கு செல்லும் சாலையில் ஒற்றை காட்டுமாடு ஒன்று உலா வருகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில சமயங்களில் வாகனங்களில் செல்பவரை விரட்டுகின்றது. எனவே இக்காட்டு மாட்டை வனத்துறையினர் அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டி நுந்தளா பகுதியில் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு மாடு appeared first on Dinakaran.

Tags : Ooty Nundala ,Ooty ,Nilgiris district ,
× RELATED கால்நடை வளர்க்கும் பகுதியாக மாறிய ஊட்டி நகராட்சி பூங்கா