திருச்சி: பாமகவை சேர்ந்த ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டதில் கைதான சரித்திர பதிவேடு குற்றவாளி போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது, போலீசார் அவரை இடது முழங்காலில் சுட்டு பிடித்தனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ரங்கம் ரயில்வே ‘ பி ’ கிளாஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) ஆட்டுக்குட்டி சுரேஷ்(35). பூ வியாபாரி. பாமக ரங்கம் பகுதி முன்னாள் தலைவராக இருந்த இவர், ரவுடி பட்டியலில் ‘ஏ’ கேட்டகிரியில் இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு மனைவி ராகினியுடன்(30) ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ரங்கம் அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல், சுரேசின் பைக்கை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தடுக்க முயன்ற மனைவி ராகினிக்கும் காலில் வெட்டு விழுந்தது.
இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, தமிழர் தேசம் கட்சி ஸ்ரீரங்கம் பகுதி நிர்வாகியான சக்தி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நந்தக்குமார்(28), திருவானைக்காவல் சக்தி நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஜம்பு(எ) ஜம்புகேஷ்வரன் (36), விமல் (எ) விமல்ராஜ்(24), ரங்கம் கீழவாசலை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ்(31), பாலகிருஷ்ணன்(29) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹெல்மெட் பிரசாத்தை (19) தேடி வருகின்றனர். இந்நிலையில், ரங்கம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், எஸ்ஐ ராஜகோபால், எஸ்எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் டிரைவர் சதீஷ் ஆகியோர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த இடத்திற்கு நேற்று மாலை ஜம்புவை ரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து வருவதாக சென்ற ஜம்பு, திடீரென ஆயுதத்தால் போலீசாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்ப முயன்றார். அவர் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், எஸ்ஐ ராஜகோபால், எஸ்எஸ்ஐ செந்தில்குமார் ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் வெற்றில்வேல் ஜம்புவை இடது முழங்காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களை கமிஷனர் காமினி பார்வையிட்டு விசாரித்தார். சுடப்பட்டதில் காயமடைந்த ஜம்புவும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை பாகன் ஜம்பு
பிடிபட்ட ரவுடி ஜம்பு யானை பாகன். இவரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரவுடி சந்திரமோகனும் நெருங்கிய நண்பர்கள். 2020ல் ரங்கம் மேம்பாலத்தில் பட்டப்பகலில் ரவுடி சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுரேஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வெளியூரில் தங்கியிருந்த சுரேஷ், சமீபத்தில் ரங்கம் வந்துள்ளார். கோயிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்த நிலையில் அவரை சந்திரமோகன் கொலைக்கு பழிக்கு பழியாக ஜம்பு கோஷ்டியினர் திட்டமிட்டு கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
The post பாமகவை சேர்ந்த ரவுடி கொலையில் சிக்கியவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்: திருச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.