பள்ளிகொண்டா, செப்.24: அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகள், பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு தேவையான உணவு பொருட்களை சேமித்து வைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் ₹4 கோடி மதிப்பீட்டில், 2000 மெட்ரிக் டன் கொள்ளளவில் கட்டப்பட்ட நவீன வட்ட செயல்முறை கிடங்கினை காணொலி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த கருங்காலி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன வட்ட செயல்முறை கிடங்கு கட்டிடம் 5 ஏக்கர் பரப்பளவில் ₹4 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2 கிடங்குகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி, கருங்காலி ஊராட்சியில் அமைந்துள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன வட்ட செயல்முறை கிடங்கினை நேற்று காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, கலெக்டர் சுப்புலட்சுமி கிடங்கு 1, 2 ஆகிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் கிடங்குகளை பார்வையிட்டார். 2000 டன் மெட்ரிக் கொள்ளளவு கொண்ட இந்த நவீன வட்ட செயல்முறை கிடங்கில் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட 130 ரேஷன் கடைகள், காலை உணவு திட்டத்தில் 135 தொடக்க பள்ளிகள், 331 சத்துணவு மையங்கள், 12 அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் ஆகியவற்றிற்கான உணவு பொருட்களை சேமித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, பிடிஓ பாரி, வேலூர் மண்டல நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மேலாளர் ஞானசபாபதி, உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர் பூவரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post உணவு பொருட்கள் சேமித்து வைக்க ₹4 கோடியில் நவீன வட்ட செயல்முறை கிடங்கு காணொலி காட்சியில் முதல்வர் திறந்து வைத்தார் அணைக்கட்டு தாலுகாவில் appeared first on Dinakaran.