×
Saravana Stores

நாளை மறுநாள் உடல் அடக்கம்: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்


சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா பேராயராகவும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் எஸ்றா சற்குணம் (86). உடல்நலக்குறைவார் சென்னையில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் வின்சென்ட் பார்க்கர் சேவை மையத்தில் நாளை வரை வைக்கப்பட உள்ளது. வரும் 26ம் தேதி, வானகரத்திலுள்ள ஜீசஸ் கால் சென்டரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், எஸ்றா சற்குணத்தின் மறைவுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை : பேராயர் எஸ்றா சற்குணம் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவராக இருந்து மிக சிறப்பாக செயல்பட்டவர். தமிழகத்தில் புதிதாக தேவாலயங்கள் எழுப்புவதற்கு பெரும் துணையாக இருந்தவர். ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்பி சமூக நீதிக்காக துணிவுடன் போராடியவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு செய்தி அறிந்து துயரம் அடைகிறேன். மத சிறுபான்மையினர் நலன் காக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்வரிசையில் இணைந்து குரல் கொடுத்தவர்.

இத்தகைய பெருமைக்குரிய அவரின் மறைவு, கிறித்துவ சமுதாயத்தினருக்கும், சமூகநீதி இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: பேராயர் எஸ்றா சற்குணம் இயற்கை எய்தினார் என்கிற செய்தி துயரமளிக்கிறது. சிறுபான்மையினர் நலனுக்காக போராடியவர், ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவரது மறைவு பேரிழப்பாகும். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா : பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நிலை குறைவால் நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். சிறுபான்மையினர்களின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். கலைஞருடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post நாளை மறுநாள் உடல் அடக்கம்: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Archbishop ,Ezra Sarkunam ,Chennai ,Ezra Charkunam ,Evangelical Church of India ,Indian ,Social Justice Movement ,
× RELATED சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை