சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஊரக பகுதிகளில் டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவை தொடங்குவதற்கு திட்டமிட்டப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சி காலத்தில்தான் முதன்முறையாக கிராமப்புற பகுதிகளில் ‘மினி பேருந்துகள்’ இயக்கும் சேவை தொடங்கப்பட்டது. பின்னர், இதற்கான அனுமதி அரசால் நிறுத்தப்பட்டு, சென்னையில் மட்டும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த சேவையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. டிசம்பர் முதல் மினி பேருந்து இயக்கத்தை தொடங்கும் பணியில் போக்குவரத்து துறை மும்முரமாக இறங்கியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசு பேருந்து இயக்கமோ, அல்லது தனியார் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளாகவோ இருந்தால் இந்த மினி பேருந்து சேவை மூலம் இயக்க திட்டமிட்டுள்ளோம். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.
70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும், 30 சதவீதம் பேருந்து வசதியிருக்கும் பகுதிகளையும் இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்படும். புதிய திட்டத்தின் படி, 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும், 8 கிலோ மீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் உள்ள பகுதிகளை கண்டறிந்து வருகிறோம். ஜி.பி.எஸ் கருவி பொருத்திய மினி பேருந்தில் 25 இருக்கைகள் இருக்கும்’’ என்றார்.
70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும், 30 சதவீதம் பேருந்து வசதியிருக்கும் பகுதிகளையும் இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்படும்.
The post தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களை இணைக்கும் வகையில் டிசம்பர் முதல் மீண்டும் மினி பஸ் சேவை appeared first on Dinakaran.