- அமைச்சர்
- AV
- வேலு
- சென்னை
- பொது
- படைப்புகள்
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
- சென்னை தலைமைச் செயலகம்
- KKSSR ராமச்சந்திரன்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டு, சாலைப் பணிகளில், நில எடுப்பில் ஏற்பட்டுள்ள காலதாமத சிரமங்களை எடுத்துரைத்தனர். அப்போது கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: நிலஎடுப்பு, மின்கோபுரங்களை மாற்றி அமைப்பது, வனத்துறையின் அனுமதி பெறுவது போன்ற இடர்பாடுகளால் திட்டப் பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒன்றிய அரசின் 5 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளன.
இதற்கான காலதாமதத்தை நிவர்த்தி செய்து, ரூ.121 கோடி செலவில் 53 கி.மீ. நீளமுள்ள 3 தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், வெள்ளக்கோவில்-சங்ககிரி சாலையில் உறுதிப்படுத்தும் பணி மற்றும் அவிநாசி-திருப்பூர் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றை ஒப்பந்தப்புள்ளி குழு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் 384 கி.மீ. நீளமுடைய 13 பணிகள், குறிப்பாக நிலம்எடுப்பு, கட்டுமானங்கள் அகற்றுதல், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை நிலநிர்வாக ஆணையர் மற்றும் நிலஎடுப்பு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி களைய வேண்டும். 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணிகள் வனத்துறையின் அனுமதி எதிர்நோக்கி நிலுவையில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக நிலம் மதிப்பு நிர்ணயம் செய்து உயர் அழுத்த மின் கோபுரங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டுவதற்கான தடையின்மை சான்றிதழ் அளிப்பதில் உள்ள இடர்பாடுகளை களைந்து தடையின்மை சான்று பெற்று, 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணியை முடிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையின் எல்லைக்குள் தற்காலிக கொட்டகைகள், வீடுகள், மற்ற கட்டுமானங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலைப் பணியில், இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமல்லபுரம் முதல் முகையூர் வரை, 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணி நீதிமன்ற வழக்குகளின் காரணமாக தாமதமாகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை-திருப்பதி பிரிவு நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்-முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி அமுதா, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி, கார்னல்-Q(Land) ரவிந்திரகுமார், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத் தலைமைப் பொது மேலாளர் பழனிவேல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர் வீரேந்திர சாம்பியால் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
The post நெடுஞ்சாலை பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.