×
Saravana Stores

தீபாவளிக்கு 400 வகை பட்டாசுகள் விற்பனை; களைகட்டும் சிவகாசி: உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் படையெடுப்பு

சிவகாசி: தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் புதிய தொழில் நுட்பத்தில் 400 வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பட்டாசுகளை வாங்க வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் படையெடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல் வெளிமாநில வியாபாரிகளும் சிவகாசியில் முகாமிட்டு பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். நமது நாட்டில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் தான் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு புதிய யுக்திகளை கையாண்டு சிறுவர், சிறுமியர், இளைஞர்களை கவரும் வண்ணம் வித்தியாசமான முறையில் ஆலை உரிமையாளர்கள் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இந்தாண்டும் பல்வேறு தொழில்நுட்பம் மூலம் கம்பி மத்தாப்பு முதல் வானில் வர்ணஜாலங்களை காட்டும் பேன்சி ரகம் வரை 400 வகை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவைகள் சிவகாசி பட்டாசுக் கடைகளில் கண்களைக் கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

வானில் வர்ணஜாலம்: வானில் வர்ணஜாலங்கள் நிகழ்த்தும் வகையில், 15 ஷாட் முதல் 240 ஷாட் வரை வெடிக்கும் பட்டாசுகள் ரூ.400 முதல் ரூ.4500 வரை விற்பனையாகின்றன. கம்பெனிகளுக்கு ஏற்ப பட்டாசு விலையில் மாற்றம் இருக்கும். இவ்வகை பட்டாசுகள் ஒன்றரை நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக வெடிக்கும். இளைஞர்களை கவரும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் ‘பேஷன் ஷோ 240’ என்னும் புதிய வகை பட்டாசு திரியில் தீயைப் பற்ற வைத்தவுடன் 200 அடி வரை உயரச் சென்று, 6 மல்டி கலரில் வண்ண, வண்ண நிறங்களில் வெடித்து விண்ணை ஜொலிக்க வைக்கும். இவைகள் 25 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக வெடிக்கும். ஷோட்டா பேன்சி என்னும் பட்டாசுகள், 250 அடி உயரம் சென்று வண்ணத்து பூச்சிகள் போல் எழும்பி சடசடவென வெடித்துச் சிதறும். ‘சன் ஸ்கை’ வகை பட்டாசுகளில் 5 குழாய்கள் இருக்கும். பற்ற வைத்தவுடன் 180 அடி உயரே சென்று 5 வண்ண கலர்களில் வெடித்து ஒளிரும். ‘கிளாசிக் கிட்டார்’ வகை பட்டாசுகள் தொடர்ந்து 12 முறை வெடிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலர் வீதம் 12 கலர்களில் வெடித்து வானில் அற்புதம் காட்டும். ‘அசரபி கோட்டி’ வகை புஸ்வானம் பற்ற வைத்தவுடன் 12 அடி உயரம் சென்று, மழைச்சாரல் போல கலர், கலராய் மின்னும். புதிய ரக பட்டாசுகள் அனைத்தும் இரவு நேரத்தில் வெடிக்கக் கூடியதாகும்.

இதுதவிர வழக்கமான மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பூஞ்சட்டி, பல்வண்ணக் கலர் பென்சில், சாவி ஜமீன் சக்கரம், பேன்சி பட்டாசுகள், புல்லட், ராக்கெட்டுகள், சில்வர்பாம், ஆட்டோபாம், குருவிவெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, சிறுவர் சிறுமிகளுக்கு என பிளவர் வாட்ஸ் பிக், ஸ்பெசல், கலர் கோட்டி, ரங்கீலா, சன் டிராப்ஸ், மூன் டிராப்ஸ், லாலிபாப், பட்டர் பிளை, ரம்பா நடனம், ராக் ஸ்டார், பார்பி பொம்மை வடிவ பட்டாசு, கடல்குதிரை, மோட்டுபட்லு, ஹார்க், கிட்ஸ்ஜோன், கோல்டன் லைன், ட்ரோன், ஸ்கை கிங்- படாபீகாக், பப்ஜி உள்ளிட்ட சாக்லேட் மற்றும் கார்ட்டூன்களில் வடிமைத்த பட்டாசுகளும் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தீபாவளிக்கு இன்னமும் 38 நாட்களே உள்ள நிலையில், புது வகையான பட்டாசுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதால் நடப்பாண்டு தீபாவளி விற்பனை அமோகமாயிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘வெளி மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் பட்டாசு அனுப்பும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. சிவகாசி பட்டாசு கடைகளில் ஆயுத பூஜை முதல் விற்பனை சூடுபிடிக்கும். புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தாண்டு பட்டாசு வியாபாரம் நன்றாக இருக்கும். ஒவ்வொரு கம்பெனிகளுக்கு ஏற்ப பட்டாசு விற்பனை விலையும், தள்ளுபடியும் இருக்கும். முன்னணி பட்டாசு ஆலைகளின் பட்டாசுகள் 3 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை விலை உயர்ந்துள்ளன’ என்றனர்.

விஐபி கிப்ட் பாக்ஸ்கள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரக பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கார்பரேட் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் விரும்பி வாங்குவர். கிப்ட் பாக்ஸ் தயாரித்து அனுப்பும் பணி சிவகாசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் ஆயுத பூஜை, கொல்கத்தாவில் துர்கா பூஜை, கர்நாடகாவில் தசரா பூஜை என நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் ஆயுதபூஜை முதல் பட்டாசு வியாபாரம் களைகட்டத் துவங்கும்.

சிவகாசியில் 15 முதல் 55 வகையான கிப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. கிப்ட் பாக்ஸ்களில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை, தரைச் சக்கரம், புஸ்வானம், கார்ட்டூன் வெடிகள் என 50க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் உள்ளன. பெண்களைக் கவரும் விதமாக தரைச்சக்கரம், கலர் புஸ்வாணம், வாணவெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களும், இளைஞர்களை கவரும் விதமாக புல்லட் ஃபாம், ஆட்டோ ஃபாம், அணுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட் வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்கள் தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிப்ட் பாக்ஸ்கள் ரூ.350 முதல் 3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.6000 கோடியைத் தாண்டும் வர்த்தகம்: 2016 மற்றும் 2019க்கு இடையில், ஆண்டுதோறும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. இதை தொடர்ந்து கடந்த 2021ல் தீபாவளிக்கு ரூ4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. 2022ல் தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல்முறையாக வர்த்தகம் நடைபெற்றது. இதே போன்று இந்த ஆண்டு 6 ஆயிரம் கோடி வர்த்தகத்தை தாண்டி பட்டாசு விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் பட்டாசு உரிமையாளா்கள் காத்திருக்கின்றனர்.

The post தீபாவளிக்கு 400 வகை பட்டாசுகள் விற்பனை; களைகட்டும் சிவகாசி: உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Kalyagatum ,Sivakasi ,Virudhunagar district ,
× RELATED தின… தின… தின… தீபாவளி!