*விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம்
பாடாலூர் : ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மக்காசோளம் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கீதா தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வேளாண்மை துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தில் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் கூட்டு வருகை என்ற இனத்தின் கீழ் செட்டிகுளம் கிராமத்தில் மக்காசோளம் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கீதா, வேளாண்மை துணை இயக்குநர் பழனிசாமி (உழவர் பயிற்சி நிலையம்),
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பச்சியம்மாள், வேளாண்மை அலுவலர் தனபால் (உழவர் பயிற்சி நிலையம்), திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தின் பேராசிரியர்கள் கோவிந்தராஜ் (பயிர் பாதுகாப்பு அலுவலர்), அமுதா (உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்) சிவகுமார் (உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர்) ஆகியோர் பார்வையிட்டனர். மக்காச்சோள பயிரில் படைப்புழு கண்டறியப்பட்டு, படைப்புழுவை கட்டுப்படுத்த 2 % வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5% வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்கவும், உயிரியல் பூச்சிக்கொல்லியான மெட்டாரசியம் ஒரு லிட்டர் தண்ணீரில் 2% கலந்து கொண்டு தெளிக்கலாம் எனவும்,
இது தவிர மிகவும் தூளான வயல் மண்ணுடன் வேப்பங்கொட்டை தூள் கலந்து படைப்புழு உள்ள பயிர்களில் குருத்துக்களில் இடுவதன் மூலம் புழுவானது மண்ணுடன் சேர்த்து உணவை உண்ணுவதால் புழு இறந்து விட வாய்ப்புள்ளது எனவும், கண்காணிக்கப்பட்ட படைப்புழுவை, கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 வீதம் பொருத்துவதன் மூலம் ஆண் அந்து பூச்சிகள் கவர்ந்து அளிக்கப்படுவதால் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார்கள்.
மேலும் பருத்திப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ மற்றும் பச்சை தத்து பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 20 வீதம் மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியை வயலில் வைக்கவும் 2 % வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5% வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினர்.மேலும் வேளாண்மை துறை திட்டங்களான தேசிய உணவு மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி செயல் விளக்க வயல்,
ஒரு கிராமம் ஒரு பயிர் செயல் விளக்க வயல் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரமான பருத்தி விதை உற்பத்தி மற்றும் விநியோகம் இனத்தில் பருத்தி செயல் விளக்க திடல்கள் ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினர். இறுதியில் மக்காசோளம் மற்றும் பருத்தி பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த வயல்வெளி ஆய்வு ஏற்பாட்டினை ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post செட்டிகுளத்தில் மக்காச்சோளம், பருத்தி வயல்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.