×
Saravana Stores

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 48 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 48 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.9.2024) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 48 நபர்களில், 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டிலுள்ள வனம் மற்றும் வன உயிரின வளத்தை சமுதாய பங்களிப்பு, புதுமையான முயற்சிகள், மக்கள் ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் சார்ந்த முறையில் பாதுகாப்பதும், வளமான மற்றும் மீள்தன்மை உடைய வனங்களை உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமாகும். வன வளம் மற்றும் வன உயிரின வளங்களை நன்முறையில் மேலாண்மை செய்திட வனத்துறையிலுள்ள பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனத்துறையின் பணிகளில் தொய்வு ஏற்படாவண்ணம் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசால் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர், வனத்தொழில் பழகுநர், உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கு 154 நபர்களும், கருணை அடிப்படையில் 164 நபர்களும், என மொத்தம் 318 நபர்கள் பணிநிமயனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 308 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியிலிருந்து வனக்காவலர்களாக பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகள் வழங்குதல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு முதலமைச்சர் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார். உதவி வனப் பாதுகாவலர்கள் வனப் பாதுகாப்பு மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு சட்ட செயலாக்கம், வன நிர்ணயப் பணிகள், தீ தடுப்புப் பணிகள், கிராம வனக் குழுக்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், வன நிர்வாக பணிகளில் மாவட்ட வன அலுவலர் / வனப் பாதுகாவலர் / தலைமை வனப் பாதுகாவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, கள உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 167 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 48 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் இன்றையதினம் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

உதவி பொறியாளர்கள், காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டங்களின் கீழ் தங்களின் உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளால் வரம்புக்கு இசைவாணைக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, அத்தொழிற்சாலைகளில் தளஆய்வு மேற்கொண்டு உரிய இசைவாணை கட்டணம் மற்றும் பரிந்துரைகளுடன் ஆய்வறிக்கையினை மேல்நடவடிக்கைக்காக சமர்ப்பித்தல், புதிய தொழிற்சாலைகள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய இசைவாணையின்றி இயங்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து வாரிய இசைவாணை பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல், தொழிற்சாலைகளின் கழிவுநீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வகங்களுக்கு பகுப்பாய்வுக்கு அனுப்புதல், மாவட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுடன் இணைந்து காற்று மாதிரி ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் விஜயந்திர சிங் மாலிக், இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) மீதா பானர்ஜி, இ.வ.ப., தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆர். கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 48 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu Pollution Control Board ,K. Stalin ,Chennai ,K. ,Stalin ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை...