- அலியார் புதிய ஆயக்காடு
- பொள்ளாச்சி
- அலி அணை
- கோயம்புத்தூர்
- ஆயக்காடு
- வெட்டிக்காரன்புதூர்
- சேதுமடை
- தின மலர்
*தண்ணீர் திறப்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, சேத்துமடை கால்வாய்களுக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் கேரள பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குருவை நெல் சாகுபடி மேற்கொள்ள மே மாதத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில், குருவை நெல்சாகுபடி மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், பொள்ளாச்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்கும் கடந்த ஜூன் 2வது வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், அம்பராம்பாளையம், வடக்கலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த தண்ணீர் திறப்பு வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் சுமார் இரண்டு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து, ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியையும் எட்டியவாறு தொடர்ந்து இருப்பதால், புதிய ஆயக்கட்டு பாசன பகுதியான பொள்ளாச்சி கால்வாய் மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தண்ணீர் திறப்புக்கு முன்பாக, மெயின் வாய்க்கால் மற்றும் சேதமான கிளை வாய்க்கால்களை ஆய்வு மேற்கொண்டு சீர்படுத்திய பிறகே தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்குட்பட்ட கால்வாய் பகுதியில் தேசிய ஊரக வேலையுறுதி திட்ட பணியாளர்களை கொண்டு புதர்களை அப்புறப்படுத்துவது, மணல்மேடு போன்ற பகுதியை சமப்படுத்துவது உள்ளிட்ட பராமரிப்பு பணியானது தற்போது துவங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் சில வாரத்திற்கு தொடர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்தலோசனை கூட்டம், விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆழியார் அணையிலிருந்து தற்போது பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 120 அடி கொண்ட ஆழியார் அணையில் முழு அடியையும் தண்ணீர் தொட்டிருப்பதால், பழைய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்திருக்கும். இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியான பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மற்றும் சேத்துமடை கால்வாய் பகுதி விளைநிலங்கள் பயன் பெற கால்வாய்களை முறையாக பராமரித்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தேசிய வேலையுறுதி திட்ட பயனாளிகளை கொண்டு ஆங்காங்கே கால்வாய்கள் சீர்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
இப்பணி நிறைவடைந்ததும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து கலந்தாலோசித்து, எப்போது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு எடுக்கப்படும். அதன்பிறகே, அது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு முறையான உத்தரவு வந்தவுடன், ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
The post ஊரக வேலையுறுதி திட்ட பயனாளிகள் மூலம் ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய் பராமரிப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.