தர்மபுரி : தர்மபுரி மாவட்ட எல்லையான கல்வராயன் மலையில், எஸ்பி மகேஸ்வரன் தலைமையில், 35 பேர் கொண்ட குழுவினர் நேற்று, கரடுமுரடான வனப்பகுதியில், 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள கோட்டப்பட்டி வனச்சரகத்தில், கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. இந்த மலையின் கிழக்கு பகுதி அடிவாரத்தில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், மேற்கு பகுதி அடிவாரத்தில் சேலம், தர்மபுரி மாவட்டங்கள் இணைகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலை உள்ளது. இந்த மலைகளை சுற்றி நூற்றுக்கணக்கான மலைக்கிராமங்கள் உள்ளன. இதில், தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 48 மலைக்கிராமங்களான கோட்டப்பட்டி, சித்தேரி, சிட்லிங், வேலனூர், ஏகே.தண்டா, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் அதிகம் சாகுபடி செய்கின்றனர். பொதுமக்கள் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட கல்வராயன் மலைப்பகுதியில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. மாவட்ட எஸ்பியின் தீவிர நடவடிக்கையால், கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் எஸ்.தாதம்பட்டியைச் சேர்ந்த மோகன், வேடியப்பன் ஆகியோர் வெளிமாவட்டத்தில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து, பதுக்கி விற்றனர். அவர்கள் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அரூர் தாலுகாவில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டத்தை ஒருங்கிணைக்கும், தர்மபுரி மாவட்ட எல்லையான கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன், கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், அரூர் பகுதி வன அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்கள் உட்பட 35 பேர் கொண்ட குழுவினர், கல்வராயன் மலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அடர்த்தியான வனப்பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் நடந்து சென்று, மாவட்ட எல்லை பகுதி வரை சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், கள்ளச்சாராய நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், அப்பகுதி மலைக்கிராம பொதுமக்களை நேரில் சந்தித்து, உரிமம் இல்லாத துப்பாக்கிளை தாங்களாகவே முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அல்லது அப்பகுதி விஏஓ, ஊர் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எஸ்பி அறிவுறுத்தினார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தை கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக உருவாக்க, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லை. நேற்று ரகசிய தகவலின் பேரில் 35 பேர் கொண்ட குழுவினர், மாவட்ட எல்லையான கல்வராயன் மலையில் 4 மணிநேரம் நடந்து சென்று சோதனை நடத்தியதில், கள்ளச்சாராயம் நடமாட்டம் இல்லை என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு இந்த பகுதியில், கள்ள சாராய கடத்தல் தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்து, 86 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 1000 லிட்டர் கள்ளச்சாராயம், 2 ஆயிரம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. நடப்பாண்டு இதுவரை 30 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்து, 26 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்,’ என்றார்.
The post கல்வராயன் மலை வனப்பகுதியில் 4 கிமீ நடந்து சென்று சாராய வேட்டையில் ஈடுபட்ட எஸ்பி appeared first on Dinakaran.