*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி பகுதியில் சுனாமி குடியிருப்பு வீடுகள் காலியாக உள்ளதால், ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் ஏ.மணக்குடி கடலோர பகுதியில் பொதுமக்கள் சுனாமி போன்ற பேரிடர்களில் சிக்கி தவிக்க கூடாது என, கடந்த திமுக ஆட்சியில் 13ஆண்டுகளுக்கு முன் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தனியார் மூலமாக பெண்டர் விடப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் பிறகு அந்த சுனாமி குடியிருப்பு வீடுகள் பெறும்பாலும் வீடுகள் இல்லாத பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், அப்போதைய சில அதிகாரிகள் முறைகேடாக வீடுகள் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தில் வீடுகளை ஒதுக்கீடு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சுனாமி வீடுகள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து பெரும்பாலான வீடுகளில் பயனாளிகள் வீடுகளை பயன்படுத்த முன்வராமல் வீடுகளை பூட்டியே வைத்துள்ளனர்.
மேலும் அங்குள்ள வீடுகளில் 60 சதவீதம் வீடுகளுக்கு மேலாகவே பூட்டியே கிடக்கின்றன. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அந்த சுனாமி குடியிருப்பு பகுதி திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதால், அதற்கு பின் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசு அப்பகுதிக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. இந்த காரணத்தால் அங்கு குடியேறிய பயணாளிகள் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் அங்கு இருக்கும் வீடுகளிலும் பயனாளிகள் குடியேறாமலும், முறையான பராமரிப்பு இன்றி வீடுகளை சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீடுகள் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. இந்த வீடுகளை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும், பிறகு உரிய பயனாளிகள் அவரவர் வீடுகளில் குடியேறாமல் இருந்தால் அந்த வீடுகளை ஏழை,எளிய பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அப்பகுதியில் குடியிருக்கும் பயனாளி கூறுகையில், கலைஞர் ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் இங்கு பல கோடி ரூபாய் செலவில் எங்களுக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்தார். வீடு கட்டி கொடுத்த பின்னர் திமுக ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதற்கு பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இங்குள்ள சுனாமி குடியிருப்பு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்வரவில்லை.
இதனால் இங்கு சீரான மின்சாரம் வருவதில்லை. இங்குள்ள வீடுகளில் உள்ள மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களும் பழுதடைந்து விடுகிறது. சரியான குடி தண்ணீர் வசதியின்றி டேங்கர்களில் வரும் தண்ணீரை தான் குடம் ஒன்றுக்கு ரூ. 7 முதல் 10 வரையிலும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது என்றார்.
மேலும் பல வீடுகளில் பயனாளிகள் குடியேராமல் உள்ளதால், வீடுகளை சுற்றி கருவேல முட்புதர்கள் மண்டிகாடு போல் உள்ளது. ஆகையால் முட்புதர்களை அகற்றி தருவதுடன் நாங்கள் அடிப்படை வசதி கோரி கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சொல்லி ஊராட்சிக்கும் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. தற்போது நடைபெறும் திமுக அரசு, கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த சுனாமி குடியிருப்பு பகுதிக்கு நீன்ட காலங்களுக்கு பிறகு தற்போதைய ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒரு சில பகுதிகளில் உள்ள தெருக்களில் தெருவிளக்கு அமைத்து கொடுத்துள்ளனர். இதேபோல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம், குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தையும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடுகள் இருப்பதால், அவர்கள் அந்த வீடுகளை விட்டு விட்டு வந்து இங்கு குடியேறாமல் புறக்கணித்து வருகின்றார்கள். ஒரு சிலர் இங்கு சரியான அடிப்படை வசதி இல்லை என கூறி குடியேற மனமின்றி உள்ளனர்.
இதைவிட எத்தனையோ மக்கள் இருக்க கூட வீடு இல்லாமல், வாடகை வீட்டில் இருந்து கொண்டு குடும்பங்கள் வறுமையில் மிகுந்த கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்ற நிலை உள்ளது. இவர்களின் நிலையை மாற்ற அனைவருக்கும் வீடு என்ற உன்னதமான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றது. இவை பாராட்ட தக்கது.
இதற்கும் மேலாக ஏழை,எளிய மக்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.மேலும் அ.மனக்குடியில் கட்டப்பட்டுள்ள சுனாமி வீடுகளில் வசதி படைத்த வீடு உள்ள நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும் அவர்கள் அதில் குடியேறாமல் இருப்பதால், கருவேல மரங்கள் அடர்ந்து பயனற்ற நிலையில் உள்ளது. குடியேறாமல் இருக்கும் வீடுகளை ஏழை,எளிய பொது மக்களுக்கு வழங்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கூறுகின்றனர்.
The post குடியேறாத சுனாமி வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.