திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உரிமையாளர்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பு செய்த புகாரில் ஐஜேகே நிர்வாகி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நில உரிமையாளர்களை மிரட்டி அவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை அபகரிப்பதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமேஷ் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் அகலி என்ற பெயரில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
அதனடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என 14 பேர் வீடுகளில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையின் அடைப்படையில் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சந்திர மௌலி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். 14 பேரில் பட்டறை சுரேஷ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அந்த சோதனையில் 66 பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பாத்திரங்கள் மிரட்டி வாங்கியதாகவும், கந்துவட்டி பெயரிலும் மிரட்டி வாங்கியுள்ளார். சட்டவிரோதமாக அவர் மிரட்டி வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. இத்தகைய சோதனையின் போது பட்டறை சுரேஷ் தலைமறைவாகி இருந்தார். தொடர்ந்து அங்கு கைப்பற்றப்பட்ட நிலப்பத்திரங்களின் அடைப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் மத்தமாடிபட்டியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்யப்பட்ட போது அங்கும் சில நிலப்பத்திரங்கள் ஆயுதங்கள் இருந்த நிலையில் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்த அவரது கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து பட்டறை சுரேஷை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் பாண்டிச்சேரியில் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பாண்டிச்சேரிக்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு மறைந்திருந்த பட்டறை சுரேஷை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. யாரிடமெல்லாம் இது போன்று சட்டவிரோதமாக நிலங்களை அபகரித்து உள்ளார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய நில அபகரிப்பு புகார்கள் ஏதேனும் இருந்தால் அதனை உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆப்ரேஷன் அகலியின் கீழ் நிலங்களை அபகரித்தவர்களின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருச்சி மாவட்டத்தில் உரிமையாளர்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பு செய்த புகாரில் ஐஜேகே நிர்வாகி சுரேஷ் கைது..!! appeared first on Dinakaran.