டெல்லி: 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரஜ்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும், அப்ஜித், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா துரோணவல்லி, தானியா , வைஷாலி ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் பங்கேற்றது. இதில் ஆடவர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இதேபோல் இந்திய மகளிர் அணியும் இந்த முறை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறது.
இந்திய மகளிர் அணி கடைசி சுற்றில் 3.5-0.5 என்ற கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்து, 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது. இந்நிலையில், 45வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி தனது X தள பதிவில் தெரிவித்ததாவது; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். இந்த குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டு பாதையில் ஒரு புதிய அத்தியாய்த்தைக் குறிக்கிறது. இந்த வெற்றியானது, செஸ் ஆர்வலர்களின் தலைமுறைகளை விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்! எங்கள் சாம்பியன்களான திவ்யா தேஷ்முக், ஆர் வைஷாலி, டி ஹரிகா, தானியா சச்தேவ், வந்திகா அகர்வால், அவர்களின் கேப்டன் அபிஜித் குண்டே ஆகியோரை எண்ணி பெருமைப்படுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புத்திசாலித்தனம், குழுப்பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன. இந்தியாவின் மகள்கள் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். இந்தியாவிற்கு இது ஒரு உண்மையான வரலாற்று நாள்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து! appeared first on Dinakaran.