- பசுமை விண்வெளி சுற்றுச்சூழல் பூங்கா
- கிண்டி ரேஸ் கிளப்
- தமிழ்
- தமிழ்நாடு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சென்னை கின்டி
சென்னை: சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழல் பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945ம் ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அரசிடமிருந்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தமிழ்நாடு அரசு குத்தகையை ரத்து செய்து, இந்த நிலத்தினை மீளப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக உருவாக்கம் செய்யப்படவுள்ளது.
எனவே, கிண்டியில் நிலக் குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் செய்யப்பட்ட நிலத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூ.4832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நிலமாற்ற கோரிக்கையினை ஏற்று, அத்துறைக்கு நிலமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகரம் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 86.9 லட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 சதவீதமாகத்தான் உள்ளது. இது பிற இந்திய மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.
ஆகவே, சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், சென்னை நகரமயமாக்குதலால், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மக்கள் தொகை பெருகிவரும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது.
சென்னைவாழ் மக்கள் தங்கள் உடல்நலனிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் போதுமான பொது இடங்களை உருவாக்க வேண்டிய நோக்கத்துடன், நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள பசுமையான சூழலைக் கொண்ட பூங்காக்கள் அவசியம் ஆகும். ஆகவே, இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டியுள்ளது.
சென்னை நகரில் ஒரு பெரிய அளவிலான பூங்காவினை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், சென்னை நகரத்தில் வசிப்பவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பொதுப் பூங்காக்களைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாப்பதிலும் அரசின் முக்கியப் பங்கு உள்ளது.
மாநகரத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்திடும் வகையில் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றினை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் நிறுவுதல் மிக அவசியமானது. இங்கு அமைக்கப்படவுள்ள பூங்காவானது, மக்களது மன மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், ஓய்வுக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மெருகேற்றுவதற்கும் வழிவகுக்கும்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சென்னையின் சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் ஏற்கனவே தனியார் அமைப்புகளிடம் இருந்த அரசு நிலங்களை மீட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தற்போது சென்னை கிண்டியில் மிகப் பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த பூங்கா, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூங்காவால் ஏற்படும் நன்மைகள்…
* பூங்காக்கள் மக்களின் உடல், மன நல ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன.
* மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து மனதுக்கு பூங்காக்கள் அமைதியைத் தருகின்றன.
* சுத்தமான காற்றைத் தரும், வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும், ஆரோக்கியமான சமுதாயம் அமைந்திட உதவும்.
* நகரத்தின் வெப்பமான சூழலைத் தணிக்கும் மற்றும் வெள்ளப் பாதிப்பினை குறைக்கும்.
* சிறார்கள் ஓடியாடி விளையாடுவதற்குப் போதுமான இட வசதியை அளிக்கும்.
The post கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு appeared first on Dinakaran.