சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: உணர்வுப்பூர்வமான பிரச்சனையில் கைவைத்துள்ளோம். சாதாரணமான பிரச்சனை இல்லை. விசிக சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு மற்ற மாநாடு போல் இருக்காது.
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் மது வேண்டாம் என்று கூறுவார்கள் ஆனால் மதுவை ஒழிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் செய்வார்கள். எந்த ஒரு கட்சியும் மது இருப்பதால் என்ன தப்பு, மது கடைகள் திறந்து வைப்பதால் என்ன தப்பு என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன.
ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன. இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் ஒரே நாளில் மதுக்கடைகளை மூடி விட முடியும்: திருமாவளவன் கருத்து appeared first on Dinakaran.