சென்னை: என்னிடம் வரி பற்றி பேசாதீங்க. மன்னிப்பு கேட்டதா சொல்லுவாங்க என்று கூறி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்கேப்பானார். சென்னை கொட்டிவாக்கத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, மீனவ மக்களுக்கு பாஜ உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி மீனவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மீனவர்கள் வெளிநாட்டிற்கு கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்மூலம் அந்நிய செலவாணி மூலம் அதிகளவில் பணம் கிடைக்கும். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் இந்தியாவில் பாரம்பரிய மீனவர்கள் குறித்து எடுத்துக்கூறி மீனவர்களுக்கு எவ்வித நஷ்டமும் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருறோம்.
பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்கள் குறையாமல் இருக்க போராடி வருகிறோம். எதிர்கட்சிகளின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம். பெரிய கட்டிட அலுவலகங்கள், 100 அடி கொடி கம்பங்கள் வைத்தால்தான் பெரிய கட்சி அல்ல. இந்தியாவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி பாஜதான். தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைப்போம். ஒவ்வொரு தொண்டனையும் வளர்க்க கூடிய ஒரே கட்சி பாஜ. கட்சி திறமை உள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கராத்தே தியாகராஜன், மாநில நிர்வாகிகள் எஸ்.ஜி.சூர்யா, எம்.சி.முனுசாமி, கொட்டிவாக்கம் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் நேற்று நடந்த தனியார் விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்றவர்களுடன் நிதி அமைச்சர் கலந்துரையாடினார்.
விழாவில் பொறுப்பாளர் பேசும்போது, ‘விழா முடிவதற்குள் அனைவரும் வரியை கட்டிவிடுங்கள்’ என நகைச்சுவையாக கூறினார். இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டி, ‘என்னிடம் வரி தொடர்பாக இன்னும் 7 நாட்களுக்கு பேசாதீர்கள். இல்லையென்றால் என்னிடம் மன்னிப்பு கேட்டதாக தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்’ என்றார்.
The post வரி பத்தியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க…சொல்கிறார் நிர்மலா appeared first on Dinakaran.