×

வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ‘ஆல் ரவுண்டர்’ அஷ்வின் ஆட்ட நாயகன்

சென்னை: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்தது. 144 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணி, ஜடேஜா – அஷ்வின் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் விளாசி அசத்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது. இதையடுத்து, 227 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. பன்ட் 109, கில் 119 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 515 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் ஷான்டோ 51 ரன், ஷாகிப் அல் ஹசன் 5 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷாகிப் 25 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் ஜடேஜா – அஷ்வின் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஒரு முனையில் கடுமையாகப் போராடிய ஷான்டோ 82 ரன் (127 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜடேஜா பந்துவீச்சில் பும்ரா வசம் பிடிபட்டார்.

வங்கதேசம் 2வது இன்னிங்சில் 234 ரன் எடுத்து (62.1 ஓவர்) ஆல் அவுட்டானது. ராணா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 21 ஓவரில் 88 ரன் விட்டுக்கொடுத்து அரை டஜன் விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியது. ஆல் ரவுண்டராக ஜொலித்த அஷ்வின் (113 ரன் மற்றும் 6 விக்கெட்) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் செப். 27ம் தேதி தொடங்குகிறது.

The post வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ‘ஆல் ரவுண்டர்’ அஷ்வின் ஆட்ட நாயகன் appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Ashwin ,CHENNAI ,MA Chidambaram Stadium ,Chepakkam, Bangladesh ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் இந்து கோயில் நிர்வாகி அடித்துக் கொலை