×
Saravana Stores

டெல்லி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; 13 துறைகளை கவனிக்கும் முதல்வர் அடிசி: 26, 27ம் தேதிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு

புதுடெல்லி: புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், முதல்வர் அடிசி 13 துறைகளை கவனிக்க உள்ளார். வரும் 26, 27ம் தேதிகளில் அடிசி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமாக இருந்த கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்ததால், டெல்லியின் பெண் அமைச்சராக இருந்த அடிசி, கட்சி எம்எல்ஏக்களால் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதையடுத்து நேற்று டெல்லியின் முதல்வராக அடிசி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மேலும் 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். வரும் 26, 27ம் தேதியில் அடிசி தலைமையிலான புதிய அரசு தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டியுள்ளதால், அன்றைய தினங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டெல்லியில் சட்டசபையின் பதவிக் காலம் முடியும் நிலையில், அடிசியின் முதல்வர் பதவி என்பது சில மாதங்களே இருக்கும்; அதன்பின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் புதிய முதல்வர் பதவியேற்ற பிறகு அமைச்சர்களின் இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அடிசி, கல்வி, நிதி, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட 13 துறைகளை கவனிப்பார். அமைச்சர் சவுரப் பரத்வாஜ் சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் சமூக நலன் உள்ளிட்ட எட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோபால் ராயிடம் சுற்றுச்சூழல் உட்பட மூன்று துறைகளும், கைலாஷ் கெலாட்டுக்கு போக்குவரத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட நான்கு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு வழங்கல் மற்றும் தேர்தல் துறையை இம்ரான் ஹுசைனும், எஸ்சி-எஸ்டி துறையை முகேஷ் அஹ்லாவத் கவனிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post டெல்லி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; 13 துறைகளை கவனிக்கும் முதல்வர் அடிசி: 26, 27ம் தேதிகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Addis ,New Delhi ,Addis government ,Admi Party ,Dinakaran ,
× RELATED புகை மண்டலமானது டெல்லியில் காற்று...