×
Saravana Stores

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

கோவை: கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணி சில மாதம் முன்பு துவங்கியது. மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 32.40 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் சங்கர் ஆனந்த் இன்பரா நிறுவனத்தின் மூலமாக பணிகள் துவக்கப்பட்டன. இந்த பணிகள் 30 சதவீதம் நிறைவு பெற்றது. மதுக்கரை மைல்கல் முதல் சிறுவாணி ரோடு செல்லப்ப கவுண்டன்பாளையம் வரை இந்த பணிகள் நடக்கிறது. 26 குறுக்கு பாலம் கட்டும் பணி முடிவடைந்தது. சிறுபாலம் 2 இடத்தில் முடிக்கப்பட்டது. ரோடு பணிகள் மண் சமன் செய்து தார் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அறிவொளி நகர் பகுதியில் 2.6 கிமீ தூரத்திற்கு தார் தளம் அமைக்கப்பட்டது. 3.7 கி.மீ தூரத்திற்கு ஜல்லி, வெட்டி மிக்ஸ் தளம் உருவாக்கப்பட்டது. மொத்தம் உள்ள 11.8 கிமீ தூர ரோடு வரும் ஜனவரி மாதம் முடிந்து விடும்.

4 இடத்தில் ரவுண்டானா உடன் சந்திப்பு ரோடு உருவாக்கப்பட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்படும். சில இடங்களில் ரோடு உயர்வாக இருப்பதால் அந்த பகுதியில் சாலை பாதுகாப்புக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுக்கரை மைல்கல் மற்றும் மாதம்பட்டி பகுதியில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது. இந்த மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடியும். மேம்பாலம் இதர அனைத்து பணிகளும் 3 மாதத்தில் முடிந்து விடும். மேம்பாலம் பணிகள் நடந்தாலும் ரோடு பணிகள் முடிந்து விட்டால் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்டமாக 12.8 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு பணி துவக்கப்படவுள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ரோடு அமைப்பதற்காக 70 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட ரோடு பணிகள் நடத்த சுமார் 260 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மதிப்பீடு தயாரித்து டெண்டர் விட்டு விரைவில் பணிகள் நடத்தப்படவுள்ளது. மேலும் 3ம் கட்ட ரோடு பணிகளுக்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகளும் விரைவில் துவக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டால் பாலக்காடு வழியாக, மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் கோவைப்புதூர், பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி, சிறுவாணி, தொண்டாமுத்தூர், வெள்ளிங்கிரி பகுதிக்கு விரைவாக சென்று வர முடியும். மேலும் இரண்டாம், மூன்றாம் கட்ட பைபாஸ் ரோடு அமைக்கப்படும் போது தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மார்க்கமாக செல்லும் வாகனங்களின் பயணம் எளிதாகும். இதர பகுதிகளுக்கும் இந்த பைபாஸ் ரோடு உதவிகரமாக இருக்கும். தார் ரோடு பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும் appeared first on Dinakaran.

Tags : MILESTONE ,MONTHAMBATI ,KOWAI ,Madukkari ,Narasimma Nayakanpalayam ,West Expressway ,Dinakaran ,
× RELATED பொற்கொல்லர்களின் நகை பட்டறைக்கு...