சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடத்தில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் முதல் ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 பெட்டிகள் தயாரிப்பதற்காக ரூ.1215.92 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் கையெழுத்தாகி, கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் உற்பத்தி தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை உற்பத்தியாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் 08.02.2024 அன்று தொடங்கியது. ரயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முதல் மெட்ரோ ரயிலுக்கான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில், ஒட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரயில், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் சோதனை தடத்திற்கு இன்று (22.09.2024) மாற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி மற்றும் பொது ஆலோசகலர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். உற்பத்தியாளர் வளாகத்தில் அனைத்து நிலையான சோதனைகளும் முடிந்த பின்னர், மெட்ரோ ரயில் பூந்தமல்லி பணிமனைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, மெட்ரோ ரயில் கட்டம்-2 வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்ற பிறகு பயணிகளின் சேவையை தொடங்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு! appeared first on Dinakaran.