பெய்ரூட்: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 7 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 37 பேர் பலியானார்கள். காசா போரில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்ததற்காக அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படையினரை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர், வாக்கிடாக்கியை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து நூதனமான தாக்குதலை நடத்திய இஸ்ரேல், நேற்று முன்தினம் தலைநகர் பெய்ரூட்டில் தஹியா மாவட்டத்தில் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியது. 2006ல் இஸ்ரேல், ஹிஸ்புல்லா பேருக்கு பிறகு நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 கட்டிடங்கள் சேதமடைந்தன. அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.
இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக நேற்று அதிகரித்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 7 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 37 பேர் இறந்துள்ளனர். 68 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தங்களின் 2 கமாண்டர்கள் மற்றும் 12 உறுப்பினர்கள் பலியானதாக ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. மேலும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 23 பேரை காணவில்லை என லெபனான் பொதுப்பணி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அலி ஹாமி கூறி உள்ளார்.
The post இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் லெபனானில் பலி 37 ஆக அதிகரிப்பு: ஹிஸ்புல்லா கமாண்டர்கள் 2 பேர் சாவு appeared first on Dinakaran.