×
Saravana Stores

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.5,069 கோடி: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.5,069 கோடி மின் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் நிலுவையில் வைத்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம் வீடு, வணிக உள்ளிட்ட பிரிவுகளுக்கு மட்டுமில்லாமல் உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் விநியோகம், தெரு விளக்குகள் போன்ற சேவைகளுக்கும் மின் விநியோகம் செய்கிறது. இதற்கான கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டும். இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் ரூ.5,069 கோடி மின் கட்டணம் நிலுவையில் வைத்துள்ளதாகவும், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.936 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் விநியோகத்திற்காக தாழ்வழுத்த IIஏ பிரிவில் உள்ள குறைந்தபட்சம் 6.55 லட்சம் இணைப்புகள் மின்வாரியத்திற்கு ரூ.5,069 கோடி கட்டணம் பாக்கி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, சுமார் 90,292 இணைப்புகள் ரூ.1,400 கோடி கட்டணம் நிலுவை தொகை வைத்துள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அதிகபட்சமாக ரூ.2,500 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. பொது விளக்குகள் மற்றும் நீர் விநியோகம் செய்ய தேவைப்படும் மின்சாரம் முன்பை விட இப்போது விலை உயர்ந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சரியான நேரத்தில் நிலுவை தொகையை வசூலித்திருந்தால், 2022-23ம் ஆண்டின் நிகர இழப்பு ரூ.10,868 கோடியில் 60 சதவீதம் குறைந்திருக்கும்.

வீட்டு இணைப்புகளுகான இலவச மின்சார மானியத்தை அரசிடம் இருந்து முன்பே பெற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழிவகை செய்துள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் நீண்ட நாட்கள் கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. நிலுவை தொகையை வசூலிக்கும் போது தாமதாக கட்டணம் செலுத்தியதற்கு கூடுதல் கட்டணம் அதாவது 6 சதவீதம் வசூலிக்க வேண்டும், அந்த தொகை ரூ.306 கோடி வரை வரும். சென்னை மாநகராட்சி உட்பட பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் 2022ம் ஆண்டு வரையிலான நிலுவைத் தொகையை 24 தவணைகளில் செலுத்தி வருகிறது. முழு நிலுவைத் தொகையையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.5,069 கோடி: மின் வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,CHENNAI ,electricity ,Tamil Nadu Electricity Board ,
× RELATED 70,000 புதிய மின் கம்பம் வாங்க மின்வாரியம் திட்டம்