×

5 அமைச்சர்களுடன் டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி: கெஜ்ரிவால், சிசோடியா பங்கேற்பு

புதுடெல்லி: ஆளுநர் மாளிகையில் ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்ற எளிமையான விழாவில் டெல்லியின் 8வது முதல்வராக அடிசி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ஒரு புதியவர் உள்பட 5 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்தநிகழ்ச்சியில் கெஜ்ரிவால், சிசோடியா, ஒன்றிய அமைச்சர், பாஜ எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவரான கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும் முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை விதித்தது. இதையடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கடந்த 17ம் தேதி அவர் தனது முதல்வர் பதவியை சொன்னபடி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து, அமைச்சராக இருந்து வந்த அடிசி, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக அந்த கட்சியின் எம்எல்ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்றைய தினமே அவர் ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சிமையமைக்க உரிமை கோரினார். கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதம் மற்றும் அடிசியின் ஆட்சியமைக்கும் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சக்சேனா, அதனை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிவைத்தார். மேலும், செப்டம்பர் 21ம் தேதி (நேற்று) பதவியேற்பு விழாவை நடத்த அனுமதிக்கும்படி ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அதற்கான அனுமதியை கடந்த 19ம் தேதி ஜனாதிபதி வழங்கினார். இந்தநிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் முன்னிலையில் அடிசி மாநிலத்தின் 8வது முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

டெல்லியின் 3வது பெண் முதல்வராகவும் நாட்டின் 17வது பெண் முதல்வராகவும் அடிசி பதவியேற்றுள்ளார். அப்போது அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் சக்சேனா செய்துவைத்தார். அதன்பிறகு, சவுரப் பரத்வாஜ் முதலில் அமைச்சராக பதவியேற்றார், அதனை தொடர்ந்து கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன் மற்றும் புதுமுகம் முகேஷ் அலாவத் ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்றனர். அவர்களுக்கும் ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எளிமையாக நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, ஒன்றிய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா உள்ளிட்ட பாஜ எம்.பி.க்கள், மாநில போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

The post 5 அமைச்சர்களுடன் டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி: கெஜ்ரிவால், சிசோடியா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : ADC ,Delhi ,CM ,Kejriwal ,Sisodia ,New Delhi ,Addisi ,8th Chief Minister of Delhi ,Governor ,House ,Union Minister ,BJP ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நெல்லை வி.கே.புரத்தில் 18 செ.மீ. மழை பதிவு