பெய்ரூட்: இஸ்ரேல் – காசா இடையிலான போருக்கு மத்தியில் லெபனானில் பேஜர் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த பேஜர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், இந்த பேஜர்கள் இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்த தாக்குதலுக்கான சதி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அமெரிக்க ஏஜென்சிகளும் கூறுகின்றன. பேஜர் குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவில் பிறந்த நார்வே நாட்டு பிரஜையின் பெயரும் வெளியாகியுள்ளது.
ஹங்கேரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, நோர்டா குளோபல் லிமிடெட் என்ற பல்கேரிய நிறுவனம் பேஜர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் நார்வே குடியுரிமை பெற்ற ரின்சன் ஜோஸ் ஆவார். ரின்சன் ஜோஸ் வயநாட்டில் பிறந்தவர் என்றும், எம்பிஏ படித்துவிட்டு நார்வேக்கு குடிபெயர்ந்ததாகவும் கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரின்சனின் தந்தை ஜோஸ் மூத்தீடம் தையல்காரராக ஒரு கடையில் வேலை செய்கிறார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை டெய்லர் ஜோஸ் என்று அழைக்கின்றனர். பல்கேரிய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நாட்டிலிருந்து அத்தகைய பொருட்கள் எதுவும் சப்ளை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
மேலும் ரின்சன் ஜோஸுக்கும், பேஜர் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ளது. அதேநேரம் வெடித்த பேஜர்களில் தைவான் நிறுவனமான கோல்ட் அப்பல்லோவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆனால், இவை தங்களுடைய தயாரிப்புகள் அல்ல என்று கூறியுள்ளது. பல்கேரியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் பேஜர்கள் வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. ‘அஜு ஜான்’ என்ற பயங்கரவாத அமைப்புடன் ரின்சனுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரின்சனுக்கு ஜின்சன் என்ற இரட்டை சகோதரர் இருப்பதாகவும், அவரது சகோதரி அயர்லாந்தில் வசிப்பதாகவும் இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.
ரின்சன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்ததாகவும், ஜனவரி வரை தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது. ரின்சன் ஜோஸ் மானந்தவாடியில் உள்ள மேரி மாதா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் நார்வேக்கு கேர்டேக்கராக சென்றார். இருந்தாலும் ரின்சன் நிறுவனம் பேஜர் தயாரிப்பில் ஈடுபட்டதா அல்லது ஒப்பந்தத்தில் ஈடுபட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
The post லெபனானில் நடந்த பேஜர் குண்டுவெடிப்பில் நார்வே குடியுரிமை பெற்ற கேரள பட்டதாரிக்கு தொடர்பு?.. ஹங்கேரிய ஊடகங்கள் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.