புதுடெல்லி: பணி அழுத்தத்தால் பெண் ஆடிட்டர் மரணம் அடைந்த விவகாரத்திற்கு மத்தியில், வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை கூடாது என்று காங்கிரஸ் எம்பி வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பட்டயக் கணக்காளரான பணிபுரிந்த கொச்சியைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் பணி அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அன்னா செபாஸ்டியன் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சக ஊழியர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு 14 மணி நேரம் ெதாடர் பணிச்சுமையே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் வௌியிட்ட பதிவில், ‘வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை இருக்கக் கூடாது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் ஊழியர்களை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும், வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் அதிகமாக வேலை செய்யக் கூடாது.
பணியிடங்களில் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது. மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்னையை எழுப்புவோம்’ என்று கூறியுள்ளார்.
The post பணி அழுத்தத்தால் பெண் ஆடிட்டர் மரணம்; வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை கூடாது: காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.