×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும்.
குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் நடைப்பெற்று வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் அல்லது அக்டோபர் 10ம் தேதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். புதிய பணிக்காக சாலைகளை எக்காரணம் கொண்டும் தோண்டக்கூடாது. தோண்டிய பள்ளங்களை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத்துறையின் அனைத்து முதல் நிலை மீட்பாளர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவர்களை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.5. பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை பின்பற்றி, மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Chief Secretary ,Chennai ,Murukanandam ,northeast ,Tamil Nadu ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,North East Monsoon Precaution Action ,
× RELATED வடகிழக்கு பருவமழை துவங்கியதால்...