×
Saravana Stores

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்


திருவள்ளூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. திருவள்ளூர்: பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் மூலவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட்  ரங்கநாதன் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் பத்மாவதி தாயார் சமேத, பிரசன்ன  வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்காரும், செயல் அலுவலருமான ஏ.பிரகாசம் மற்றும் கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேல்பொதட்டூர் தரணிவராக கோயில், பள்ளிப்பட்டு வரதநாராயண கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் உள்ள பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. செங்கல்பட்டு மேட்டுதெருவில் உள்ள வேதாந்த ஞானதேசிக பெருமாள் கோயில், திருமலைவையாவூரில் உள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் மலை மீதுள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில், பழைய சீவரத்தில் மலை மீதுள்ள லட்சுமி நரசிம்மர், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் மற்றும் செய்யூர், மதுராந்தகம், கடப்பாக்கம், சித்தாமூர், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், அஷ்டபுஜம் பெருமாள் கோயில், அழகிய சிங்கபெருமாள் கோயில், சொன்ன வண்ணம் செய்த பெருமாள், வைகுண்ட பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் பேரூராட்சி மேட்டு தெருவில் உள்ள பஜனை கோயிலின் 27ம் ஆண்டு புரட்டாசி மாத கருடசேவை உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், தேவி, பூதேவியுடன் கோயில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் முடிந்தபின் கோயிலில் இருந்து புறப்பட்ட பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்தபடி கருணீகர் தெரு, திருமலை பிள்ளை தெரு, பஜார் வீதி, செங்குந்த பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்திருந்தனர்.

The post புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perumal Temples ,Thiruvallur, Kanchi, Senkai districts ,Puratasi ,Thiruvallur ,Perumal ,Tiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED சாலையில் தேங்கிய தண்ணீரில் கப்பல் விட்டு கம்யூனிஸ்ட் போராட்டம்