டெல்லி: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக்கொண்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 155 நாளாக திகார் சிறையில் இருந்த ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வராகவும் இருந்த கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாள்களிலேயே கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து, புதிய முதல்வராக அமைச்சர் அடிசி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
காங்கிரசின் ஷீலா தீட்சித், பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக அதிஷி இன்று பதவியேற்றுக்கொண்டார். அதிஷிக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.முதலமைச்சர் அதிஷியுடன் கோபால்ராய், பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சட்டமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்போது புதியதாக அமைந்துள்ள அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வாய்ப்புள்ளது. ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அடிசி தலைமையிலான அரசு ெவற்றி பெறும் என்கின்றனர். இதற்கிடையே டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொண்டால், தற்போது முதல்வராக பதவியேற்கும் அடிசி வரும் நவம்பர் மாதம் வரை அதாவது சுமார் இரண்டு மாதங்களுக்கு முதல்வர் பதவியில் நீடிப்பார். தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 23ம் தேதி முடிவடைய உள்ளதால், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை தேர்தலை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தால், அடிசியின் பதவிக்காலம் ஐந்து மாதங்கள் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மம்தாவுக்கு அடுத்து அடிசி
டெல்லியின் ஐந்தாவது முதல்வராக வெறும் 52 நாள்கள் (அக்டோபர் 1998- டிசம்பர் 1998) மட்டுமே மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்தார். அதன்பின் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா தீட்சித், டெல்லியில் 15 ஆண்டுகள், 25 நாள்கள் முதல்வராக (டிசம்பர் 1998- டிசம்பர் 2013) பதவி வகித்தார்.
இவர் தான் ெடல்லியின் மிக நீண்ட முதல்வராகப் பதவி வகித்தார். இவரது தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சியானது, மூன்று தேர்தல் வெற்றிகளைப் பெற்றது. இந்த நிலையில் டெல்லியின் மூன்றாவது முதல்வராக அடிசி பதவியேற்க உள்ளார். அதேநேரம் மேற்குவங்க மாநிலத்தின் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அடிசி பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு: அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் appeared first on Dinakaran.