×
Saravana Stores

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்


திருச்சி: புரட்டாசி மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை முதலே பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் ரங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதியில் குறிப்பிட்ட நேரங்களில் மூலஸ்தான சேவை நடைபெற்றது. மேலும் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

லால்குடி அருகே அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் வடிவழகிய நம்பி தேவி, பூதேவியுடன் புஷ்ப கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளினார். குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலிலும், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். துறையூர் பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தேவி, பூதேவி சமேதராக பெருமாள் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், காது குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் தேவி பூதேவியுடன் காட்சியளித்தார். அதிகாலையில் இருந்தே கோயிலில் குவிந்த பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி பெருமாளை வழிபட்டனர்.

இதேபோல் தஞ்சை மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மேல ராஜா வீதி நவநீதகிருஷ்ணன், கீழ ராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கல்யாண வெங்கடரமணசாமி பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

The post புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Saturn ,Perumal ,Lord ,Vishnu ,
× RELATED திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில் வழிபாடு..!!