திருச்சி, செப்.21: ‘இந்தியா துாய்மை தினம்’ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மண்டல அஞ்சல் துறை சார்பில் ஸ்ரீரங்கத்தில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய அரசின் ‘தூய்மையே சிறந்த சேவை’ திட்டம் 4.0 என்ற திட்டம் நடப்பாண்டு கடந்த 17 முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, அக்.2ம் தேதி ‘இந்தியா தூய்மை தினம்’ என கொண்டாடப்பட உள்ளது.
இந்த தூய்மை திட்டத்தின் பிரச்சார நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக, பொதுமக்கள் மத்தியில் ‘தூய்மை சேவை’ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று அஞ்சல் துறை சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முதல் அம்மா மண்டபம் வரை விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, திருச்சி மண்டல அஞ்சல் தலைவர் நிர்மலா தேவி தலைமை வகித்தார். இதில், தூய்மை சேவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அஞ்சல் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதில், பொதுமக்களுக்கு தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திருச்சி மண்டல அலுவலகம், திருச்சி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் அலுவலகம், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட அலுவலகம், திருச்சி தலைமை அஞ்சலகம் மற்றும் ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள், எழுத்தர்கள், தபால்காரர்கள், பன்முக திறன் பணியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்சி மண்டல அலுவலக உதவி இயக்குனர் பசுபதி, ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.
The post ஸ்ரீரங்கத்தில் ‘இந்தியா துாய்மை தினம்’ குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி appeared first on Dinakaran.