×
Saravana Stores

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி

* மொத்த வேட்பாளர்கள் 39 மொத்த வாக்காளர்கள் 1.71 கோடி மொத்த ஓட்டுச்சாவடி 13,400

கொழும்பு: இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் 2022 ஜூலை 14ல் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அவரது தலைமையில் நடந்த அரசில் இடம் பெற்று இருந்த ராஜபக்சே குடும்பமும் வெளியேறியது. இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே 2022 ஜூலை 20ல் பதவி ஏற்றார்.

இதை தொடர்ந்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் இலங்கை பொருளாதாரம் ஓரளவு வலுவடைந்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 39 பேர் போட்டியிடுகிறார்கள்.

கடந்த முறை நடந்த அதிபர் தேர்தல்கள் இருமுனைப் போட்டியாக இருந்த நிலையில், இந்தத் தேர்தல் பலமுனைப் போட்டியாக உள்ளது. எனினும் இந்த தேர்தலில் நான்குமுனைப்போட்டி காணப்படுகிறது. குறைந்தபட்சம் 50 சதவீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மட்டுமே அதிபராக முடியும். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக இலங்கை முழுவதும் 13,400 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது இலங்கை புதிய அதிபர் யார் என்பது தெரிந்து விடும். இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

The post இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags : President ,Sri Lanka ,COLOMBO ,Sri ,Lanka ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்பகுதிகளில் இந்திய...