மதுரை: கூல் லிப் போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்வது குறித்து ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமென்றும், 9 மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் புகையிலை பறிமுதல் வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ‘‘தமிழ்நாட்டில் கூல் லிப் எனும் போதைப்பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரி பல மனுக்கள் தாக்கலாகின்றன. பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகியுள்ளது தெரிய வருகிறது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற பொருட்களுக்கு தடை இருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அங்கு இவற்றை தயாரிப்போரிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. போதைப் பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம்போல் செயல்பட தொடங்கி விடுகிறது. கூல் லிப் போதைப் பொருளை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? இந்த வழக்கில், ஹரியானா மாநிலம் சோனேபேட், கர்நாடக மாநிலம் தும்கூர் மற்றும் அந்தரசனஹள்ளி ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களை ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்த்து பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘தமிழகத்தில் கூல் லிப், புகையிலை, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த 9 மாதங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய பொருள் என தடை செய்யப்பட்டிருந்தால், அது மற்ற மாநிலத்திற்கும் பொருந்தும்.
எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தான் உரிய முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘கூல் லிப் போன்ற புகையிலை போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் 2 ஆண்டுகளில் அதற்கு பழகி விடுவதால், அதைவிட மோசமான போதைப் பொருட்களை தேடிச் செல்லும் அபாயமும் உள்ளது. இது உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இளம் தலைமுறையினரை பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக பள்ளியில் கழிவறைகள் உள்ளிட்ட வளாகங்களில் போதைப் பொருள் தொடர்பான பொருட்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். கடைகளில் இதுபோன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற வேறு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் எனத் தெரியவில்லை. தெரிந்தே தவறு செய்யும் பெரியவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும். ஆனால், குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை’’ என்றார். அப்போது, ஒன்றிய அரசு தரப்பில், விரிவான பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ஒன்றிய அரசு மற்றும் கூல் லிப் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மனு மீதான விசாரணையை செப். 25க்கு தள்ளி வைத்தார்.
* ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் எனத் தெரியவில்லை. தெரிந்தே தவறு செய்யும் பெரியவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும். ஆனால், குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை.
The post 9 மாதத்தில் 20 ஆயிரம் கடைகளுக்கு சீல் கூல் லிப்பை நாடு முழுவதும் தடை செய்ய ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.