சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் மாநில நிர்வாகி அஸ்வத்தாமன் உட்பட 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை 5ம் தேதி கொடூரமாக அவரது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் தேசிய கட்சியின் மாநில தலைவர் என்பதால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் நியமனம் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குபதிந்து ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, கூலிப்படை தலைவன் குன்றத்தூர் திருவெங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்தனர். அவர்களில் திருவேங்கடம் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்பித்தபோது போலீசார் தற்பாதுகாப்புக்காக சுட்டத்தில் ரவுடி திருவேங்கடம் உயிரிழந்தார்.
அதன்பிறகு கைதானவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து திருவல்லிக்கேணியை சேர்ந்த முன்னாள் பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவியும் வழக்கறிஞரான மலர்கொடி, வழக்கறிஞர்களான அரிகரன் மற்றும் வியாசர்பாடி பிரபல ரவுடி நாகேந்திரன் மகனும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் (31) உட்பட 28 பேர் இந்த வழக்கில் இதுவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கு.அரிகரன் (27), திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் மலர்கொடி (49), திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (31), திருவள்ளூர் மாவட்டம் முன்னாள் அதிமுக நிர்வாகியான வழக்கறிஞர் கோ. அரிகரன் (37), முன்னாள் பாஜ சென்னை மாவட்ட நிர்வாகி புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அஞ்சலை (51), காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த சிவா (35),
பெரம்பூர் பகுதியை சேர்ந்த பிரதீப் (28), கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகிலன் (32), கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (எ) விஜய் (21), விக்னேஷ் (எ) அப்பு (27), வியாசர்பாடியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி அஸ்வத்தாமன் (31), ராணிப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி (40),
கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (40), செந்தில்குமார் (எ) குமரா (27), கே.கே.நகரை சேர்ந்த கோபி (23) ஆகிய 15 பேரை செம்பியம் போலீசார் பரிந்துரைப்படி போலீஸ் கமிஷனர் அருண், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கடந்த 7ம் தேதி 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உட்பட15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.