மதுரை: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேசிய அளவில் ஒரு சலசலப்பை உருவாக்க பாஜ முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தர வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாடு என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிப்பதற்கான முயற்சி என அச்சப்படுகிறோம். முன்னாள் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கைவிட வேண்டும்.
அதை நடைமுறைபடுத்த அனுமதிக்கக்கூடாது என விசிக சார்பில் மனு அளிக்க உள்ளோம். எனவே, இதை நாங்கள் எதிர்க்கிறோம். ஒருமித்த கருத்துடைய அரசியல் சக்திகளோடு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வோம்’’ என்றார். திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ‘‘பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் இதுபோன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமானது. உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதனையும் அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை. விலங்கு கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்பு இருக்கக்கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதல்களை கொடுத்து, இதுபோன்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
The post உணவுப் பொருளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ப்பது வழக்கம்தான்: அரசியலாக்குவது ஏன் என்று திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.