×
Saravana Stores

கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்


கூடலூர்: கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை நுழைந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் உள்ளது. எல்லை பகுதிகளில் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் உள்ளதால், காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் தினமும் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமாக கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் வந்து செல்லும் நிலையில், தற்போது நகருக்குள்ளேயே வரத்துவங்கி உள்ளது. கூடலூர் சின்ன பள்ளி வாசல் தெருவுக்குள் நேற்று இரவு 10 மணிக்கு காட்டு யானை ஒன்று பொதுமக்களின் வீடுகளை ஒட்டி நடந்து வந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்களும் வனத்துறையினருடன் இணைந்து டார்ச் லைட்டுகள் உதவியுடன் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வேகமாக கோத்தர் வயல் பகுதிக்கு சென்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோத்தர் வயல் மற்றும் அக்கார்டு பகுதிகளில் இரவு நேரத்தில் உலா வரும் இந்த காட்டு யானை நகருக்குள்ளும் வந்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

கால்நடைகளை போல் காட்டு யானைகளும் ஊருக்குள் நடமாடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதே போல் தொரப்பள்ளியை அடுத்த குனில்வயல், இரு வயல், தேன் வயல் பகுதிகளில் சுற்றித்திரியும் 2 காட்டு யானைகள் விவசாயிகளின் வயல்களில் இறங்கி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டி, அவை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kudalur Nagar ,Kudalur ,Nilgiris District Kudalur ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Dinakaran ,
× RELATED இரவு முழுவதும் காவல் காத்தாலும்...