உத்தமபாளையம்: தேனி அருகே கண்டமனூரில் இருந்து கேரளாவுக்கு தார்க்கலவை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகளை உத்தமபாளையத்தில் சிறைபிடித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த லாரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் டிப்பர் லாரிகள் மூலம் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜல்லி, எம்சாண்ட், பிசாண்ட் மணல் ரகங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்தது. இதன் காரணமாக டிப்பர் லாரி உரிமையாளர்கள், பில்டர்கள், கட்டிடங்கள் கட்டுவோருக்கு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து புதிதாக அறிவித்துள்ள விலை ஏற்றத்தை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முதல் நடத்துவதாக அறிவித்தனர். தேனி மாவட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலை, தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள ஒரு கிரஷரில் இருந்து 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தார் கலவையை ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பார்த்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த வாகனங்களை உத்தமபாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தினர். மேலும் அந்த வாகனங்கள் ஆய்வு செய்ததில் முறையான ஆவணங்கள், அனுமதி இல்லாமல் அந்த லாரிகள் இயங்குவது தெரியவந்தது.
அந்த லாரிகளை சிறைபிடித்த டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர், இது குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் உடனடியாக இந்த வாகனங்களை ஆய்வு செய்யும்படி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் வணிகவரி அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், வணிகவரி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post அனுமதியின்றி தார்க்கலவை ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.