×

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

விதவிதமான உணவுகளை கண்டாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். புதுப்புது சுவைகளிலும் கண்கவர் நிறங்களிலும் உணவு இருந்தால் எவ்வளவு கூட்டம் நின்றாலும், கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி சாப்பிட தயாராக இருக்கிறார்கள். அதுவும் இரவு நேரத்தில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சாலையோர கடைகளில் ஜாலியாக பேசிக்கொண்டே சாப்பிட விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே விடிய விடிய டீ, பன் பட்டர் ஜாம், பிரியாணி, சாட் உணவு வகைகள் என கலோரி அதிகமுள்ள உணவுகள் நள்ளிரவுகளில் விற்பனையில் களைகட்டி வருகிறது. சில உணவகங்களும் இந்த ஸ்டைலை பின்பற்ற துவங்கி இருக்கிறார்கள். இரவு நேரங்களில் ஆர்டர் செய்தால் அவற்றை சுடச்சுட கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இது போன்ற உணவுகளை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஜாலியாக இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தினை யாரும் உணர்வதில்லை.

அதில் முக்கியமாக ரோஸ் நிறத்தில் பஜ்ஜி, தர்பூசணி பஜ்ஜி, பீர் பஜ்ஜி, சார்கோல் தோசை, நீல நிற தோசை, பர்கர் இட்லி, பான் தோசை போன்ற உணவுகள் இப்போது டிரெண்டாக மாறி வருகிறது. ஆனால் இவை உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் என்று மக்கள் உணர்வதில்லை. பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் முறையற்ற உணவு வகையால், உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. உணவு என்பது உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த பொருள் என்கிற நிலை மாறி, இப்போது அது ஃபேஷனாகிவிட்டது. மாறிப்போன இந்த உணவுகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் முறையான உணவுகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

முறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள்…

பெரும்பாலான இரவு நேர உணவகங்களில் அதிகம் வறுக்கப்பட்ட உணவுகள்தான் விற்கப்படுகின்றன. பழங்களை வறுத்தால், அதிலுள்ள நல்ல ஊட்டச்சத்துக்கள் குறைகின்றன. அதனை இரவு நேரங்களில் சாப்பிடும் போது வயிறுக் கோளாறு ஏற்படும். பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று ஆசையை தூண்டுவதால், சாப்பிட்டு விடுகிறார்கள். இதனால் செரிமான பிரச்னை, வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற தொல்லைகளால் அவதிப்பட நேரிடும்.

விளைவு தூக்கமின்மை. தற்போது வீட்டில் சமைப்பது குறைந்து, வெளி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் பலர் வயிறு சம்பந்தமான பிரச்னைகளை சந்திக்கிறார்கள். உணவகத்தில் உறைய வைத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பயன்படுத்துகிறார்கள். அதனால் அந்த உணவுகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதிகளவில் வெளி உணவக உணவுகளால் 10 முதல் 19 வயதுக்குள் இருப்பவர்கள் இது போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

விளைவு அவர்கள் சிறு வயதிலேயே நீரிழிவு பிரச்னைக்கு ஆளாகிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம். அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
இரவு நேரங்களில் சுடச்சுட பிரியாணி சாப்பிடுவதால் ஸ்ட்ெரஸ் குறைவதாக கூறுகிறார்கள். என்றாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை. ஆனால் தினமும் சாப்பிடுபவர்களும் உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து சாப்பிடுவதால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் வயிறு பிரச்னைகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். அதனை சமாளிக்க மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொள்வது மேலும் தீங்கினை ஏற்படுத்தும்.

விழிப்புணர்வை ஏற்படுத்துவது…

அரசுதான் இதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும். இது போன்ற உணவுகளை தொடர்ந்து கடை பிடிப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் வயிறு சார்ந்த பிரச்னைகளை மருத்துவரிடம் செல்லாமல் தட்டிக் கழிக்கக் கூடாது. உடலில் பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதுவே அவர்களுக்கு உடல் கொடுக்கும் விழிப்புணர்வு என்று அவர்கள் புரிந்து கொள்வது அவசியம். ஆரோக்கியமில்லாத இரவு நேர உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அரசு தரப்பில் ஆரோக்கியமற்ற ஸ்ட்ரீட் உணவுகளுக்கு அனுமதியினை தவிர்க்கலாம்.

அதே சமயம் இதனை ஆரோக்கிய உணவாக மாற்றினால் வெளியே சாப்பிட வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக அமையும். பாரம்பரியமான உணவுகளை ஆதரிக்கும் வகையில் கடைகள் அமைக்க வேண்டும். முடிந்த அளவு வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது சிறந்தது. அவ்வாறு வீட்டில் சமைக்கும் போது காய்கறிகள், பருப்பு வகைகள், புரோட்டீன் நிறைந்த உணவுகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிறு போதுமென்று சொல்வதுதான் உங்களுக்கு உங்க உடல் கொடுக்கும் சிக்னல். அதன் பிறகு ஒரு பருக்கை கூட எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனை கடைபிடித்தால் கண்டிப்பாக உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்ப காரணம்..?

பெரும்பாலும் இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் அதிக வேலை பளு உள்ளவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். அது உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டும். அதனால் ருசியாக என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவற்றை சாப்பிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒருவித திருப்தியை அளிக்கிறது. அந்த காரணத்தால் ஆரோக்கியம் குறித்து அவர்கள் யோசிப்பதில்லை. அடுத்து மது அருந்தும் பழக்கமும் தற்போது அதிகரித்துள்ளது. மதுவுடன் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதாலும் ஆரோக்கியம் பாதிக்கும். இந்த நிலை தொடர்ந்தால், பிற்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உணவினை சாப்பிடுவது தப்பில்லை. நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதா..?

ஆரோக்கியமான உணவு என்றாலே விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதுதான் பலரின் எண்ணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகள் எளிதாக கிடைப்பவைதான். கீரை வகைகள் அனைத்தும் எளிதாக கிடைக்கக்கூடியவை. பாதாம், பிஸ்தாதான் சாப்பிட வேண்டும் என்றில்லை. அதற்கு மாற்றாக வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் சேர்ப்பது அவசியம். காய்கறிகள் இல்லாத போது துவையல்களை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், சாட் உணவுகள், பொரித்த உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நம் பொறுப்பு.

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தின் முக்கியத்துவம்…

உணவு விஷயத்தில் நாம் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதைவிட ஆரோக்கியம் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை திருமண தடைக்கு பெரிய காரணமாக அமைகிறது. திருமணத்திற்குப் பிறகு பலர் குழந்தைபேறுக்காக பல லட்சங்கள் மருத்துவத்திற்காக செலவு செய்கிறார்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, முறையான தூக்கம் இருந்தால் உங்களின் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும். முதுமை காலத்துக்கு பணம் சேமிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் உடல் நலனுக்காக ஆரோக்கிய உணவுகளில் முதலீடு செய்து உங்களின் உடலை பேணிக் காணுங்கள். ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்… ஸ்மார்ட்டாக வாழுங்கள்” என்றார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

தொகுப்பு:ரம்யா ரங்கநாதன்

The post அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED கர்ப்பகால புற்றுநோய் அறிவோம்!