×
Saravana Stores

திருப்பதி லட்டு தரம் குறித்து முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியது உண்மைதான்: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல்

ஆந்திரா: திருப்பதி லட்டு தரம் குறித்து முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியது உண்மைதான் என தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு,ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டுகூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் விலங்குகளின் கொழுப்பு, தாவர எண்ணெய் கலந்திருப்பது தெரியவந்தது. லட்டு தரம் குறித்து விசாரணை நடத்தியபோது முதலமைச்சர் சந்திர பாபு கூறியது உண்மை என புரிந்தது. லட்டு தரத்தை ஆய்வு செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உத்தரவிட்டிருந்தார். நவீன வசதிகள் உள்ள 2 வெவ்வேறு ஆய்வகங்களில் லட்டு தயாரிப்புக்காக நெய் பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வக மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வந்தன.

ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் 4 லட்டு நெய் மாதிரிகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. லட்டு தயாரிப்புக்கான நெய் சப்ளை செய்யும் விநியோகிஸ்தர்களை அழைத்து எச்சரித்தோம். லட்டு தயாரிக்க சுத்தமான பசு நெய்யை பயன்படுத்த தவறினால் புனிதம் கெடும் என்பது புரிந்தது. நெய் ஆய்வுக்காக எங்களிடம் பரிசோதனை கூடம் இல்லை என்பதை பயன்படுத்தி தரமற்ற நெய் விநியோகம் செய்யப்படுகிறது. லட்டு தரம் குறைவாக இருப்பது குறித்து ஆந்திர மாநில அரசிடம் தெரிவித்தோம். ஏ.ஆர்.டைரி புட்ஸ் நிறுவனத்தின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்கள் தரமற்ற நெய் விநியோகித்தது தெரியவந்தது.

திருப்பதி கோயில் வளாகத்திலேயே பரிசோதனை கூடம் அமைக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. புதிதாக டெண்டர் விட வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளதாக ஷியாமளா ராவ் விளக்கம் அளித்தார். திருப்பதி கோயில் வரலாற்றிலேயே முதல் முறையாக லட்டு மாதிரிகளை வெளியில் சோதனை செய்ததாகவும் தகவல் தெரிவித்தார். நான் பதவியேற்றபோது முதலமைச்சரை சந்தித்து லட்டு தரம் குறைவாக இருப்பது குறித்து முறையிட்டோம் என்றும் கூறினார்.

 

The post திருப்பதி லட்டு தரம் குறித்து முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூறியது உண்மைதான்: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chandra Babu Naidu ,Tirupathi ,Thirupathi Devastana ,Tirupati ,Jegan ,Mohan ,Chief Minister Chandra Babu Naidu ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை