×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, காங். முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி , கு.ஹரிஹரன், கோ.ஹரிஹரன், சதீஷ்குமார், விஜயகுமார், சிவா, முகிலன், விக்னேஷ், ராஜேஷ், பிரதீப், செந்தில்குமார், கோபி ஆகிய 15 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், மேற்படி 15 எதிரிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே மேற்கண்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் கடந்த 07.09.2024 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Police Commissioner ,Arun ,Bagujan Samaj ,Sempiam Police Station ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:...